Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ராஷ்ட்ரீய லோக் தளத்தையும் வளைத்த பா.ஜ., : தரை தட்டுகிறது 'இண்டியா' கூட்டணி கப்பல்

ராஷ்ட்ரீய லோக் தளத்தையும் வளைத்த பா.ஜ., : தரை தட்டுகிறது 'இண்டியா' கூட்டணி கப்பல்

ராஷ்ட்ரீய லோக் தளத்தையும் வளைத்த பா.ஜ., : தரை தட்டுகிறது 'இண்டியா' கூட்டணி கப்பல்

ராஷ்ட்ரீய லோக் தளத்தையும் வளைத்த பா.ஜ., : தரை தட்டுகிறது 'இண்டியா' கூட்டணி கப்பல்

ADDED : பிப் 10, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
ஏற்கனவே ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் பா.ஜ., கூட்டணிக்கு வந்து விட்ட நிலையில், 'இண்டியா' கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரியையும், பா.ஜ., தங்கள் பக்கம் வளைத்துள்ளது. நான்கு லோக்சபா தொகுதிகள், மத்தியில் கேபினட் அமைச்சர் பதவி, உ.பி., மாநில அரசில் இரண்டு அமைச்சர் பதவிகள் என பேசி முடிக்கப்பட்டுள்ளது. இதனால், இண்டியா கூட்டணியின் கப்பல் தள்ளாடத் துவங்கியுள்ளது.

பா.ஜ.,வுக்கு எதிராக, வரும் லோக்சபா தேர்தலில் களம் காணும் நோக்கில், முக்கிய எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட இண்டியா எனும் கூட்டணிக்கு விதை போட்டவரே, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார் தான்.

அவரே சலிப்படையும் அளவுக்கு கூட்டணியின் நிலைப்பாடுகளும், ஆலோசனைகளும் இருந்தன.

மகிழ்ச்சி


அந்த சமயம் பார்த்து, பீஹார் முன்னாள் முதல்வரும், அம்மாநில அரசியலில் போற்றப்படுகிறவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கப்படுமென்ற அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, பீஹார் அரசியல் களத்தில் காட்சிகள் மாறின. கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை வரவேற்று நிதீஷ் குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறி, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. உ.பி.,யின் மேற்கு பகுதியில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்து, விவசாயிகளின் தலைவராக போற்றப்பட்ட தலைவர் சரண் சிங்.

இவரது லோக்தளம் கட்சி தான், தற்போது ராஷ்ட்ரீய லோக்தளமாக மாறியுள்ளது. சரண் சிங்கிற்கு பின் இவரது மகன் அஜித் சிங் அந்த கட்சியின் தலைவராக இருந்து வந்தார்.

அவர் மறைந்த பின், கட்சியை முழுதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், அஜித் சிங்கின் மகனும், சரண் சிங்கின் பேரனுமான ஜெயந்த் சிங் சவுத்ரி.

இவர், இண்டியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வந்தார். உ.பி.,யில் 13 தொகுதிகளில் இவரது கட்சிக்கு ஓட்டு வங்கி உள்ளது.

ஜாட் எனப்படும் சமூகத்தினர் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் அந்த பகுதியில், அதே சமூகத்தைச் சேர்ந்த சரண் சிங் மற்றும் அவரது வாரிசு அரசியலுக்கு தனி வரவேற்பு உள்ளது.

அறிவிப்பு


இதனால் தான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக்தளத்துக்கு ஏழு தொகுதிகளை தந்து, கூட்டணியை முதல் நபராக உறுதிப்படுத்தினார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே பா.ஜ., களம் இறங்கியது.

இதன்படி, நான்கு லோக்சபா தொகுதிகள் மற்றும் மத்தியில் கேபினட் அமைச்சர் பதவி, உ.பி., மாநில அரசில் இரண்டு அமைச்சர் பதவிகள் என பேசி முடிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் எவை என்பதில் மட்டும் பேச்சு நடக்கிறது.

கடந்த சில நாட்களாகவே ஜெயந்த் சிங்குடன் அடுத்தடுத்து நடந்த திரைமறைவு பேச்சு தீவிரம் பெற்று, தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் தான், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவிப்பு வெளியாகிஉள்ளது. தாத்தா சரண் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்கியுள்ளதையே காரணம் காட்டி, ஜெயந்த் சிங் தே.ஜ., கூட்டணி பக்கம் திரும்ப உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம். ராஷ்ட்ரீய லோக்தளத்தின் வெளியேற்றம் நிகழ்ந்தால், தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கும் இண்டியா கூட்டணி என்ற கப்பல், தரை தட்டி நின்று விடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணி மாறுவதை உறுதி செய்த ஜெயந்த் சிங்

ஜெயந்த் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:முந்தைய அரசுகள் இதுவரையில் செய்ய முடியாமல் போனவற்றை, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை செய்து முடித்துள்ளது. பிரதான அரசியல் களத்தில் இல்லாமல் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஊக்கம் அளிப்பதற்கு மிகவும் நன்றி. இது மிகப்பெரிய நாள். உணர்ச்சிப்பூர்வமாக உள்ளேன். ஜனாதிபதி, மத்திய அரசுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.'பா.ஜ.,வோடு இணைவீர்களா' என்று கேட்டதற்கு, ''சொல்வதற்கு இனி என்ன இருக்கிறது. இந்த கூற்றை எப்படி நான் மறுக்க முடியும்,'' என்று பதிலளித்தார்.



- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us