பா.ஜ., ராஜ்யசபா வேட்பாளர் நாராயணா கிருஷ்ணஜா பந்தகே
பா.ஜ., ராஜ்யசபா வேட்பாளர் நாராயணா கிருஷ்ணஜா பந்தகே
பா.ஜ., ராஜ்யசபா வேட்பாளர் நாராயணா கிருஷ்ணஜா பந்தகே
ADDED : பிப் 12, 2024 06:49 AM

பெங்களூரு: ராஜ்யசபா தேர்தலில், கர்நாடக பா.ஜ., வேட்பாளராக நாராயணா கிருஷ்ணஜா பந்தகே அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ராஜ்யசபாவில் காலியாகும் 56 எம்.பி., பதவிகளுக்கு, புதியவர்களை தேர்ந்து எடுக்க, வரும் 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும், மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., பதவிக்கு, கட்சியில் பலரும் துண்டு போட்டனர்.
இந்நிலையில், நாராயணா கிருஷ்ணஜா பந்தகே என்பவரை வேட்பாளராக, பா.ஜ., அறிவித்து உள்ளது. முன்னாள் எம்.எல்.சி., யான இவர், கர்நாடக பா.ஜ., துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். ஆர்.எஸ்.எஸ்., - ஏ.வி.பி.வி., - விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளில் இருந்தவர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர். பாகல்கோட் மாவட்ட பா.ஜ., பொது செயலர், விஜயபுரா மாவட்ட பா.ஜ., தலைவர், கர்நாடக பா.ஜ., செயலர் உட்பட பதவிகளை வகித்து உள்ளார்.
ராஜ்யசபாவுக்கு ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 45 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. பா.ஜ.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், நாராயணா கிருஷ்ணஜா பந்தகே எம்.பி., ஆவது உறுதியாகி உள்ளது.