சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., போராட்டம் சட்டசபை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., போராட்டம் சட்டசபை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., போராட்டம் சட்டசபை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 24, 2024 04:50 AM

பெங்களூரு : மத்திய அரசுக்கு எதிராக, இரண்டு தீர்மானங்களை, கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்ததை கண்டித்து, சபாநாயகர் இருக்கைக்கு முன்பு நேற்று பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபையை 26ம் தேதி, திங்கட்கிழமைக்கு சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.
சட்டசபையில் நேற்று முன்தினம் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை சட்டசபை கூடியதும், பா.ஜ., உறுப்பினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
சபாநாயகர் இருக்கை முன்பு வந்து, கோஷம் எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''மத்திய அரசுக்கு எதிராக, மாநில அரசு தாக்கல் செய்து உள்ள, இரண்டு தீர்மானங்கள் திடீர் முடிவு. இதனால் அந்த தீர்மானங்களை வாபஸ் பெற வேண்டும்.
''சபாநாயகர் உத்தரவின்படி, சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க, நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினோம். இந்த சபைக்கு வெளியில் மத்திய அரசை பற்றி பேசுங்கள். மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த, இரண்டு தீர்மானங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை,'' என்றார்.
சட்டசபை விவகார அமைச்சர் எச்.கே.பாட்டீல் பேசுகையில், ''சட்டத்திற்கு உட்பட்டு, மத்திய அரசுக்கு எதிரான இரண்டு தீர்மானங்களை முன்வைத்து உள்ளோம்.
''கர்நாடகாவின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் அந்த தீர்மானத்தில் உள்ளது. உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டுமா? மக்கள் நலனை பாதுகாக்க வேண்டுமா? உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்,'' என்றார்.
வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா பேசுகையில், ''நீங்கள் ஆட்சியில் இருந்த போது, பசுவதை தடை சட்டம் உட்பட பல சட்டங்களை அமல்படுத்தினீர்கள். நீங்கள் எப்படி முடிவு எடுத்தீர்கள் என்று நாங்கள் அறிவோம்.
''நீங்கள் விதிகளை பின்பற்றி தான் நடந்தீர்களா. எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம். பார்லிமென்டில் உங்கள் எம்.பி.,க்கள் எதுவும் பேசாமல், வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்,'' என்றார்.
இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் காதர் எவ்வளவோ கூறியும், பா.ஜ., உறுப்பினர்கள் அவைக்கு செல்லவில்லை.
இதனால் நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை மீண்டும் சட்டசபை நடவடிக்கைகள் தொடரும் என்று, சபாநாயகர் அறிவித்தார்.
கூட்டத்தொடர் நேற்றுடன் முடிய இருந்த நிலையில், திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.