ஒரு லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை: பிரதமர் பிறந்த நாளில் பாஜ ஏற்பாடு
ஒரு லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை: பிரதமர் பிறந்த நாளில் பாஜ ஏற்பாடு
ஒரு லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை: பிரதமர் பிறந்த நாளில் பாஜ ஏற்பாடு
ADDED : செப் 16, 2025 09:47 PM

மும்பை: பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் மஹாராஷ்டிராவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் பணி, நாளை புதன்கிழமை தொடங்குகிறது என்று மாநில பாஜ தலைவர் ரவீந்திர சவான் கூறினார்.
செப்டம்பர் 17ல்(நாளை) மோடி தனது 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் மும்பையில் மாநில பாஜ தலைவர் ரவீந்திர சவான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை,10 லட்சம் பேருக்கு கண் பரிசோதனை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடி விநியோகிக்கும் ஏற்பாடுகளை செய்ய முன்னெடுத்துள்ளோம்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கும், 10 லட்சம் பேருக்கு கண் பரிசோதனைகளை உறுதி செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகளை வழங்குவதற்கும் அரசு சாரா நிறுவனங்கள், பிற அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களை ஒன்றிணைக்க இருக்கிறோம்.
இந்த இயக்கம் பாஜவின் சேவை முயற்சியாகக் கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உள்ள மக்களுடன் இணைவதற்கான ஒரு முயற்சி.
ரத்த தான முகாம்களும் இந்த இயக்கத்தின் போது ஏற்பாடு செய்யப்படும் . இதனை பதினைந்து வாரங்களில் செயல்படுத்த 17 திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்.
நிகழ்வுகளை வெற்றிகரமாக ஒழுங்கமைப்பதை உறுதி செய்வதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜ தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
பொது மக்களுக்கு நல்லது மற்றும் தேவையானதைச் செய்வது மாநிலத்திற்கு அவசியம். மக்களுக்கு 'ரொட்டி, கப்தா மற்றும் மக்கான்' வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு ரவீந்திர சவான் கூறினார்.