அமைதியின்மையை உருவாக்க காங்., முயற்சி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கண்டனம்
அமைதியின்மையை உருவாக்க காங்., முயற்சி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கண்டனம்
அமைதியின்மையை உருவாக்க காங்., முயற்சி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கண்டனம்
ADDED : மார் 18, 2025 11:06 PM

''அம்பேத்கர் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் எதிராக, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்க காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்தார்.
புதுடில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றி வருகிறது. அரசு பணிக்கான ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்காக, நான்கு சதவீதம் இடஒதுக்கீடு, அரசியல் அமைப்புக்கு விரோதமானது.
மதங்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார். ஆனால், அவர்களோ, அம்பேத்கருக்கு எதிராக ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன் மூலம் அமைதியின்மை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதில் அவர்களுக்கு ஆர்வம். தங்களின் ஓட்டு வங்கியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்காக வரும் நாட்களில் பெரிய விலை கொடுப்பர்.
தேர்தலில் அம்பேத்கர் நின்றபோது, அவருக்கு எதிராக இரண்டு பணக்கார வேட்பாளர்களை நிறுத்தி, அவரை காங்கிரசார் தோற்கடித்தனர். அப்போதைய பிரதமர் நேரு, அம்பேத்கருக்கு எதிராக பிரசாரம் செய்தார்; அம்பேத்கருக்கு எதிராக சாவர்க்கர் பிரசாரம் செய்தாரா?
ஆங்கிலேயர் ஆட்சியின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஏழைகளை வழிநடத்தவும், சேவை செய்வதற்காகவே ஆர்.எஸ்.எஸ்., துவக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்.,ஐ விமர்சித்தால், தன் ஓட்டு வங்கி அதிகரிக்கும் என்பதற்காக சித்தராமையா பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த அமைப்பை, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் இந்திரா உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.
சித்தராமையா, உண்மையான காங்கிரஸ்காரர் இல்லை. வேறு கட்சியில் இருந்து வந்தவர். தன் விசுவாசத்தை காட்டுவதற்காக, ஆர்.எஸ்.எஸ்., பெயரை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -