பவானி ரேவண்ணா குடும்பத்தினர் மீது முன்னாள் கார் ஓட்டுனர் குற்றச்சாட்டு
பவானி ரேவண்ணா குடும்பத்தினர் மீது முன்னாள் கார் ஓட்டுனர் குற்றச்சாட்டு
பவானி ரேவண்ணா குடும்பத்தினர் மீது முன்னாள் கார் ஓட்டுனர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 07, 2024 02:39 AM
ஹாசன் : “பவானி ரேவண்ணா, என் மனைவி மீது தாக்குதல் நடத்தினார். இதில் மனைவி வயிற்றில் இருந்த கரு கலைந்தது,” என, அவரது கார் ஓட்டுனர் கார்த்திக் குற்றம்சாட்டினார்.
ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவிடம், 14 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணியாற்றியவர் கார்த்திக். இவருக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் நிலத்தை, பிரஜ்வலும், அவரது தாயார் பவானி ரேவண்ணாவும் மிரட்டி எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹாசனில் நேற்று கார்த்திக் கூறியதாவது:
என்னை வீட்டுக்கு வரவழைத்து தாக்குதல் நடத்தினர். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒரே சொத்தை, பவானி ரேவண்ணா குடும்பத்தினர், தங்களுக்கு வேண்டப்பட்டவரின் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டனர். எழுதித்தராவிட்டால் கொலை செய்வதாகவும், பொய் வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டினர். நான் சட்ட போராட்டம் நடத்துவதாக கூறியும், என்னை விடவில்லை.
என் மனைவியையும் பவானி தாக்கினார். என் மனைவி கர்ப்பிணி என கூறியும், விடாமல் தாக்கினர். கீழே விழுந்த என் மனைவியின் கரு கலைந்தது.
எங்களை அடைத்து வைத்தனர்.
மறுநாள் துணை பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, நிலத்தை எழுதி வாங்கினர்.
நான் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்பதால், என் மனைவியை அடைத்து வைத்தனர். நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் நாங்கள் உயிரோடு இருந்திருக்கமாட்டோம்.
நிலத்தை எழுதிக் கொடுத்த மறுநாள், பவானியும், பிரஜ்வலும் என் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரும் உடன் இருந்தனர். என் காசோலையை கொண்டு வரும்படி செய்து, அதில் பலவந்தமாக என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.
அதன்பின் ரேவண்ணாவின் அந்தரங்க உதவியாளர், எனக்கு போன் செய்து வங்கிக்கு வரும்படி அழைத்தார்.
அங்கு சென்ற போதுதான், கிரண் ரெட்டி கணக்கில் இருந்து என் கணக்குக்கு 41 லட்சம் ரூபாய் வந்திருப்பது தெரிந்தது. என்னிடம் கையெழுத்து பெற்று, பணத்தை எடுத்துக்கொண்டனர்.
எனக்கு நடந்த அநியாயம் குறித்து, போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஐ.ஜி., டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.