Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'பாரத், இந்தியா' இரண்டு பெயர்களை பயன்படுத்தலாம்: என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

'பாரத், இந்தியா' இரண்டு பெயர்களை பயன்படுத்தலாம்: என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

'பாரத், இந்தியா' இரண்டு பெயர்களை பயன்படுத்தலாம்: என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

'பாரத், இந்தியா' இரண்டு பெயர்களை பயன்படுத்தலாம்: என்.சி.இ.ஆர்.டி., விளக்கம்

ADDED : ஜூன் 18, 2024 07:34 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : பாரத் அல்லது இந்தியா இரண்டு பெயர்களையும் பாடப் புத்தகங்களிலும் பயன்படுத்தலாம். இது குறித்த விவாதம் தேவையற்றது என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி படிப்புக்கான பாடப்புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைத்து வருகிறது. சமூக அறிவியல் பாடத்துக்கான புத்தகங்களில், இந்தியா என்பதற்கு பதிலாக, பாரத் என்பதை குறிப்பிட வேண்டும் என, நிபுணர் குழு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.

இது தொடர்பாக, கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியுள்ளதாவது: பாரத் அல்லது இந்தியா ஆகிய இரண்டில், எதைப் பயன்படுத்துவது என்பது தேவையில்லாத ஒரு விவாதம். நம் அரசியலமைப்பு சட்டத்தில், இரண்டு பெயர்களும் உள்ளன. இடத்துக்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, இரண்டில் எந்தப் பெயரையும் பயன்படுத்தலாம்.

இது தொடர்பான விவாதங்கள் பயனற்றவை. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை. இந்த இரண்டு பெயர்களில் எதன் மீதும் எங்களுக்கு வெறுப்போ, துவேஷமோ இல்லை. அதனால், இரண்டு பெயர்களையும் பயன்படுத்துவோம்; பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெயர்களை நீக்க வலியுறுத்தல்


சமூக ஆர்வலர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்சிகர் ஆகியோர் கூறியதாவது: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் குழுவுக்கு ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வந்தோம்.

ஆனால், பாட புத்தகங்களில் உள்ள சில விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சில பாடங்களில் உள்ள அம்சங்கள் பாரபட்சமாக இருப்பதாக கூறி, எங்கள் பெயர்களை ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி கடந்தாண்டே தெரிவித்திருந்தோம். ஆனால், எங்கள் பெயர்கள் பாட புத்தகங்களில் நீக்கப்படவில்லை. எனவே, எங்கள் பெயர்களை நீக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us