வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மால்-ஐ மூட உத்தரவு
வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மால்-ஐ மூட உத்தரவு
வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மால்-ஐ மூட உத்தரவு
ADDED : ஜூலை 18, 2024 04:14 PM

பெங்களூரு: பெங்களூரில் வேட்டி, தலைப்பாகை அணிந்து வந்ததால் மாலுக்குள் நுழைய விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மால்-ஐ ஒரு வாரத்திற்கு மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பக்கீரப்பா, (வயது 65). இவரது மகன் நாகராஜ், (வயது 35). பெங்களூரு விஜயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நாகராஜ் வேலை செய்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக பக்கீரப்பா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரு வந்தார். ஜி.டி., மாலுக்கு பக்கீரப்பாவை, நாகராஜ் கல்கி படம் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்.
பக்கீரப்பா வேட்டி, சட்டை அணிந்து, தலைப்பாகை கட்டியிருந்தார். மால் செக்யூரிட்டி, பக்கீரப்பாவை வாயிலில் தடுத்து நிறுத்தினார். வேட்டி, தலைப்பாகை அணிந்து கொண்டு மாலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் செக்யூரிட்டியிடம் வாக்குவாதம் செய்தார். இது பற்றி அறிந்ததும் சில ஊடகத்தினர் அங்கு சென்றனர்.
இதனால் வேறு வழி இன்றி பக்கீரப்பா மாலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். விவசாயி என்பதால் பக்கீரப்பா அவமதிக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. கன்னட அமைப்பினர் மால் முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (ஜூலை18) மால்-ஐ ஒரு வாரத்திற்கு மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.