மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' 125வது இடத்தில் பெங்களூரு நகரம்
மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' 125வது இடத்தில் பெங்களூரு நகரம்
மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' 125வது இடத்தில் பெங்களூரு நகரம்
ADDED : ஜன 12, 2024 11:08 PM

பெங்களூரு: 'துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2023ம் ஆண்டில், பெங்களூரு நகரம் 125வது இடத்துக்கு தள்ளப்பட்டது' வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 'துாய்மை இந்தியா' குறித்து, ஆய்வு செய்து வருகிறது. கடந்த 2023 ல் 446 நகரங்களில் துாய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது
இது தொடர்பாக, வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 25 நகரங்களில், பெங்களூரு மாநகராட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. மைசூரு முதல் இடத்திலும், ஹூப்பள்ளி - தார்வாட் இரண்டாது இடத்தையும் பிடித்து உள்ளன.
குப்பையை தனித்தனியாக பிரிப்பதில் 99 சதவீதம் பெற்ற பெங்களூரு மாநகராட்சி, குப்பை அகற்றுவதில் 'பூஜ்யம்' பெற்றுள்ளது. 4,830 சேவை பணியில், நகரம் 2805.32 புள்ளிகளும்; தரம் பிரிப்பதில் 2,500க்கு 1,125 புள்ளிகளும்; குடிமக்களின் கோரிக்கைக்கு, 2,170க்கு 1,589.82 புள்ளிகளும் பெற்றுள்ளன.
இதனால் பெங்களூரு நகரம் 2023ல் 125வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2020ல் 37 வது இடத்திலும்; 2021ல் 28வது இடத்திலும்; 2022ல் 43வது இடத்தையும் பிடித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாநகராட்சி குப்பை நிர்வகிப்பு சிறப்பு கமிஷனர் ஹரிஷ் குமார் கூறியதாவது:
முன்னதாக 10 லட்சம் மக்கள் தொகை இருந்த அனைத்து நகரங்களும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையின் கீழ் இணைக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின், மாற்றி அமைக்கப்பட்டன.
இதனால், கடந்தாண்டு 43வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால், இந்தாண்டு மீண்டும் பழைய முறையை செயல்படுத்தி உள்ளது. இதனால் நாம் பின் தங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.