Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே 'லாபி' சீட்டுக்கு முந்து! 3 சட்டசபை தொகுதிகளிலும் நிர்வாகிகள் ஆர்வம்

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே 'லாபி' சீட்டுக்கு முந்து! 3 சட்டசபை தொகுதிகளிலும் நிர்வாகிகள் ஆர்வம்

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே 'லாபி' சீட்டுக்கு முந்து! 3 சட்டசபை தொகுதிகளிலும் நிர்வாகிகள் ஆர்வம்

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே 'லாபி' சீட்டுக்கு முந்து! 3 சட்டசபை தொகுதிகளிலும் நிர்வாகிகள் ஆர்வம்

ADDED : ஜூன் 09, 2024 04:06 AM


Google News
பெங்களூரு ; மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, தங்கள் தலைவர்களிடம் அரசியல் கட்சி நிர்வாகிகள் சீட் கேட்டு, 'லாபி'யை துவக்கிவிட்டனர். சென்னப்பட்டணா தொகுதி பா.ஜ.,வுக்கா, ம.ஜ.த.,வுக்கா என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் அடுத்தடுத்து தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சி வட்டாரங்களில் எப்போதும் பரபரப்பு காணப்படுகிறது. சமீபத்தில் தான் லோக்சபா தேர்தல், மேலவை தேர்தல் அடுத்தடுத்து நடந்து முடிந்தன.

விரைவில், கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தவும், ஆளும் காங்கிரஸ் அரசு, ஆலோசித்து வருகிறது. இதன் வாயிலாக, தொண்டர்களுக்கு வாய்ப்பு தந்து, அவர்களை திருப்திப்படுத்த அக்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

குமாரசாமி வெற்றி


இதற்கிடையில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதேபோன்று, ஹாவேரி மாவட்டம், சிக்காவி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருக்கும் பசவராஜ் பொம்மை, ஹாவேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பல்லாரி மாவட்டம், சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் துகாராம், பல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவர்கள் மூன்று பேரும், ஓரிரு நாட்களில் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர்.

அதைத் தொடர்ந்து சென்னப்பட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பின், சில மாதங்களிலேயே சட்டசபை இடைத்தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது.

சீட் முன்பதிவு


மூன்று பிரதான கட்சிகள் வசம் இருக்கும், தலா ஒரு தொகுதிக்கு தேர்தல் நடப்பதால், அக்கட்சிப் பிரமுகர்கள் சீட் கேட்டு இப்போதே, தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் துண்டு போட்டு, முன்பதிவு செய்ய துவங்கி உள்ளனர்.

லோக்சபா தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் தலைவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், அலசி, ஆராய்ந்து வெற்றி பெறும் செல்வாக்கு உடைய வேட்பாளர்களுக்கே வாய்ப்பு தருவதற்கு அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இந்த விஷயத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, சீட் கேட்டு 'லாபி' செய்த தலைவர்களை, 'தொகுதியில் மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள், வாய்ப்பு தானாக வரும்' என, 'அட்வைஸ்' சொல்லி அனுப்பி வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மாநில தலைவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்.

யோகேஸ்வர் முயற்சி


பா.ஜ., தரப்பில், சிக்காவி, சண்டூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கவும்; சென்னப்பட்டணா தொகுதியை, கூட்டணிக் கட்சியான ம.ஜ.த.,வுக்கே விட்டுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதி பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் அபார வெற்றி பெற்றார். இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன். எனவே சென்னப்பட்டணா தொகுதியையும், பா.ஜ.,வுக்கு விட்டுத் தரும்படி உள்ளூர் தலைவர்கள் கோரி வருகின்றனர்.

அந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் பெரும் முயற்சி மேற்கொண்டுஉள்ளார்.

அதே வேளையில், குமாரசாமியின் மகனும், மாநில ம.ஜ.த., இளைஞரணி தலைவருமான நிகிலும் போட்டியிட விரும்புகிறார். அடுத்தடுத்த நாட்களில் இதுகுறித்து, இரு கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவெடுக்க உள்ளனர்.

நிகில் விருப்பம்


இதுகுறித்து, ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில், பெங்களூரில் நேற்று கூறியதாவது:

லோக்சபா தேர்தலில், ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை விட்டுக் கொடுக்கும்படி, தேவகவுடா, குமாரசாமி, பா.ஜ., தலைவர்களிடம் வலியுறுத்தினர்.

அதன்படியே, மூன்று தொகுதிகள் வழங்கினர். கூட்டணியில் எங்குமே குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட்டோம். சென்னப்பட்டணா சட்டசபை தொகுதியில், ம.ஜ.த.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்ற தகவலை சர்வே நடத்தி, பா.ஜ., தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின், பா.ஜ., தலைவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுத்தால், சந்தோஷம். பா.ஜ., வேட்பாளரை களமிறக்கினாலும், கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us