யக் ஷகானா நாடக மேடைகளில் பாடல் பாடி அசத்தும் காவ்யஸ்ரீ
யக் ஷகானா நாடக மேடைகளில் பாடல் பாடி அசத்தும் காவ்யஸ்ரீ
யக் ஷகானா நாடக மேடைகளில் பாடல் பாடி அசத்தும் காவ்யஸ்ரீ
ADDED : ஜூன் 09, 2024 04:06 AM

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்தில், துளு மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கலை, பண்பாடு, கலாசாரம் மீது, தட்சிண கன்னடா மக்களுக்கு பற்று அதிகம். குறிப்பாக இங்கு நடக்கும், யக் ஷகானா மேடை நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
யக் ஷகானா வேடம் அணிந்து, கலைஞர்கள் நாடக மேடையில் நடிப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நாடக கலைஞர்களை ஊக்குவிக்க துளு மொழியில், கம்பீரமாக பாடப்படும், பாடல்களும் நன்றாக இருக்கும்.
பெரும்பாலும் யக் ஷகானா மேடைகளில் பாடுபவர்கள், ஆண்களாக தான் இருப்பர். ஆனால் காவ்யாஸ்ரீ என்பவர், யக் ஷகானா மேடைகளில் பாடல் பாடி, தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார்.
தட்சிண கன்னடாவின் பண்ட்வால் அஜரு கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யாஸ்ரீ, 35. நான்காம் வகுப்பு படிக்கும் போதே, கிளாசிக்கல் இசை கற்க துவங்கினார்.
இவரது தந்தை ஸ்ரீபதி நாயக். யக் ஷகானா மேடைகளில் மத்தளம் வாசிப்பவர். தந்தை பங்கேற்கும் யக் ஷகானா நாடகங்களில், சிறு வயதில் இருந்தே காவ்யாஸ்ரீயும் பங்கேற்றார்.
யக் ஷகானாவில் மேடையில் பாடல் பாடுபவர்களை பார்த்து, அவருக்கும் அப்படி ஆக ஆசை வந்து உள்ளது. இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர் மாம்படி சுப்பிரமணிய பட் என்பவரிடம் சென்று, யக் ஷகானா மேடை பாடல்களை பாட, முறைப்படி காவ்யாஸ்ரீ கற்றுக் கொண்டார்.
அதன்பின் யக் ஷகானா மேடைகளில் பாடல்களை பாடினார். அவரது குரல் வளத்தால், ரசிகர்கள் அதிகரிக்க துவங்கினர். திருமணத்திற்கு பின்னர் யக் ஷகானா மேடைகளில் பாட முடியுமா என்று நினைத்தார். ஆனால் காவ்யாஸ்ரீ கணவரும், யக் ஷகானா நாடகங்களை ரசித்து பார்ப்பவர்.
இதனால் மனைவிக்கு அவர் எந்த தடையும் போடவில்லை.
இதுகுறித்து காவ்யாஸ்ரீ கூறுகையில், ''யக் ஷகானா நாடக மேடைகளில், கனத்த குரலால் பாட, ஆண்களால் மட்டும் தான் முடியும் என்றனர். ஆனாலும் எனக்கு பாட ஆசை இருந்தது. மாம்படி சுப்பிரமணிய பட் என்பவரிடம், நான் கற்றுக் கொண்டதை, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.