பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு தடை நவம்பரில் அமலாகும் என முதல்வர் ரேகா தகவல்
பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு தடை நவம்பரில் அமலாகும் என முதல்வர் ரேகா தகவல்
பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு தடை நவம்பரில் அமலாகும் என முதல்வர் ரேகா தகவல்
ADDED : ஜூன் 03, 2025 08:55 PM

புதுடில்லி:“சுத்தமான மற்றும் ஆரோக்கியமான டில்லி மாநகரை உருவாக்குவதே பா.ஜ., அரசின் கனவு,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
தலைநகர் டில்லியில், 'காற்று மாசுபாட்டைக் குறைக்கும் திட்டம் - 2025' முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, ரேகா பேசியதாவது:
மெட்ரோ ரயில் பயணியர் வசதிக்காக, 2,300 மின்சார ஆட்டோக்கள் ரயில் நிலைய வாயிலில் நிறுத்தப்படும். மாநகர் முழுதும் கண்டறியப்பட்டுள்ள மாசு நிறைந்த 13 இடங்களில் தண்ணீர் தெளிப்பான் நிறுவப்படும்.
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான டில்லி மாநகரை உருவாக்குவதே பா.ஜ., அரசின் கனவு. காற்று மாசுபாடு தான் மக்களின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
மேலும், 'சுத்த ஹவா சப்கா அதிகார் பிரதுஷன் பர் ஜோர்தார் பிரஹார்' என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்கும் மாநகர் முழுதும், 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதற்காக, 'ஏக் பெட் மா கே நாம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட, 'ஏக் பெட் மா கே நாம்' விழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை மக்களுக்கு உணர்த்தும்
முறைகேடுகளைத் தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் மையங்களில் தணிக்கை நடத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 'ஸ்மார்ட் இன்டெலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்' விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
நவம்பர் 1ம் தேதி முதல் பி.எஸ்., - 6 மற்றும் காஸ் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டுமே டில்லிக்குள் நுழைய முடியும். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
மேலும், 500 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான தளங்கள் டில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள், மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, ஆசிஷ் சூட் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.