இறந்த போலீஸ் ஏட்டு போட்டோவை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி
இறந்த போலீஸ் ஏட்டு போட்டோவை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி
இறந்த போலீஸ் ஏட்டு போட்டோவை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி
ADDED : ஜன 06, 2024 07:04 AM
பெங்களூரு: சில ஆண்டுகளுக்கு முன் இறந்த போலீஸ் ஏட்டுவின் புகைப்படத்தை அனுப்பி, தனியார் நிறுவன மேலாளரை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளது.
பெங்களூரு, கெங்கேரியில் வசிக்கும் சுஜித் குமாரசாமி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன், இவருக்கு அறிமுகமில்லாத நபரிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.
அதில் பேசியவர், தன்னை போலீஸ் ஏட்டு என அறிமுகம் செய்து கொண்டு, “நீங்கள் காரில் செல்லும்போது, போக்குவரத்து விதிகளை மீறியுள்ளீர்கள். 1,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். பே.டி.எம்., யு.பி.ஐ., செயலி மூலமாக பணம் அனுப்புங்கள்,” என கூறினார்.
விதிகளை மீறிய காரின் புகைப்படத்தையும் வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். அதில் ஏதோ தவறு இருப்பதை போன்று, சுஜித் குமாரசாமிக்கு தோன்றியது. போனில் பேசியவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். இதுவும் சுஜித்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பணபரிமாற்றத்துக்காக அந்நபர் க்யூ.ஆர்., கோட் அனுப்பியிருந்தார். அதில் பெங்களூரு சிட்டி போலீஸ் என, பெயர் இருந்தது.
அதை சுஜித் ஸ்கேன் செய்து பணம் பரிமாற்றம் செய்ய முற்பட்டபோது, ரூபாலி மஜுத்மார் என்ற பெயரை காண்பித்தது.
உஷாரான சுஜித், பணம் அனுப்புவதை நிறுத்தி, அடையாள அட்டையை அனுப்பும்படி கேட்டார். அந்நபரும் குமாரசாமி (சிவில் ஹெட் கான்ஸ்டபில் - 5921) என பெயர் கொண்ட அடையாள அட்டையை அனுப்பினார். சீருடை அணிந்த ஏட்டுவின் போட்டோ இருந்தது.
அப்போதும் சுஜித்துக்கு சந்தேகமாக இருந்ததால், தன் மனைவியிடம் விஷயத்தை கூறினார். அவரும் தன் நண்பரின் உதவியுடன், போலீஸ் ஏட்டுவின் அடையாள அட்டையை வைத்து, இணை தளத்தில் பரிசீலித்தபோது, அடையாள எண்ணும், போட்டோவும் 2020 பிப்ரவரி 3ல் நந்தினி லே- - அவுட்டில், சாலை விபத்தில் இறந்த தலைமை ஏட்டு பக்தராமுடையது என்பது தெரிந்தது.
அவரது போட்டோவை வைத்து, மோசடி செய்து பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இது குறித்து, சுஜித் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.