அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு 'இண்டியா' கூட்டணியில் அதிர்ச்சி
அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு 'இண்டியா' கூட்டணியில் அதிர்ச்சி
அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு 'இண்டியா' கூட்டணியில் அதிர்ச்சி
ADDED : பிப் 10, 2024 11:33 PM
சண்டிகர்,“பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்,” என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது, 'இண்டியா' கூட்டணி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருட்களை வீட்டு வாசலில் வழங்கும் திட்டத்தை, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், மக்களாகிய உங்கள் ஆசியுடன் வெற்றி பெற்றோம். இதனால், 117 இடங்களில் 92ஐ கைப்பற்றி ஆம் ஆத்மி சாதனை புரிந்தது.
அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. பஞ்சாபில் உள்ள 13 இடங்களிலும், சண்டிகரில் உள்ள ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இந்த முறை அவர்களையும் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'இண்டியா' கூட்டணியில் இருந்த பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு, இண்டியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்திஉள்ளது.