துணை முதல்வர்கள் நியமனம் டில்லியில் முறையிட திட்டம்
துணை முதல்வர்கள் நியமனம் டில்லியில் முறையிட திட்டம்
துணை முதல்வர்கள் நியமனம் டில்லியில் முறையிட திட்டம்
ADDED : ஜன 08, 2024 06:50 AM
பெங்களூரு; கர்நாடக காங்கிரசில், மூன்று துணை முதல்வர்கள் நியமனம் குறித்து சர்ச்சை நடக்கிறது. இந்த விஷயத்தை கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமுதாய வாரியாக மூன்று துணை முதல்வர்கள் நியமிக்க வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி உட்பட, பலரும் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
துணை முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் என, சிலர் சமீபத்தில் விருந்து பெயரில் ரகசிய கூட்டம் நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, என மேலும் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க, முதல்வர் சித்தராமையாவும், மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால் துணை முதல்வர் சிவகுமார் எரிச்சலடைந்துள்ளார். இவரை கட்டிப்போடும் நோக்கில், கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க முயற்சிப்பதாக, சிவகுமாரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்வர்கள் நியமன விஷயத்தை, காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல, மாநில தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் காங்கிரஸ் தலைவர்கள் குழுவினர், டில்லிக்கு செல்ல தயாராகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மூன்று துணை முதல்வர்களை நியமிப்பதால், கட்சிக்கு ஏற்படும் அனுகூலங்கள் குறித்து, விவரிக்க திட்டமிட்டுள்ளனர்.