தேர்தலுக்காக சுறுசுறுப்படைந்த அனந்தகுமார் ஹெக்டே தொண்டர்களை மதிக்காதவர் திடீர் பாச நாடகம்
தேர்தலுக்காக சுறுசுறுப்படைந்த அனந்தகுமார் ஹெக்டே தொண்டர்களை மதிக்காதவர் திடீர் பாச நாடகம்
தேர்தலுக்காக சுறுசுறுப்படைந்த அனந்தகுமார் ஹெக்டே தொண்டர்களை மதிக்காதவர் திடீர் பாச நாடகம்
ADDED : ஜன 01, 2024 06:31 AM

பெங்களூரு: நான்கு ஆண்டுகளாக அரசியல் பணிகளில் இருந்து விலகியிருந்த, உத்தரகன்னடா பா.ஜ., எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சுறுசுறுப்பாக இருப்பதாக காண்பிக்கிறார். அவருக்கு சீட் கிடைக்குமா என்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரகன்னடா தொகுதியில் பா.ஜ.,வில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற அனந்தகுமார் ஹெக்டே, அதன்பின் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கினார். சட்டசபை தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் வரவில்லை. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் நடமாடி, பா.ஜ.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தினார்.
உத்தரகன்னடா, அங்கோலாவில் பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வந்த போதும், அனந்தகுமார் ஹெக்டே விலகியே இருந்தார். கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ஒரே ஒரு வார்த்தையும் கூறவில்லை.
நான்கு ஆண்டாக, கட்சிக்கு எந்த பங்களிப்பையும் அளிக்காத இவர், லோக்சபா தேர்தல் நெருங்குவதால் சுறுசுறுப்படைந்து, தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்கிறார். தொண்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் வீட்டுக்கு வரவழைக்கிறார். இவர் தேர்தலுக்கு தயாரானாலும், இம்முறை இவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றும், கட்சிக்காக எதையும் செய்யவில்லை. சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தும் வராமல், அலட்சியம் காண்பித்தார். இத்தகையவருக்கு சீட் கொடுத்ததால், பா.ஜ.,வில் எப்படி நடந்து கொண்டாலும் கட்சி பொருட்படுத்தாது என்ற தவறான செய்தி பரவும். எனவே அவருக்கு சீட் கொடுக்க கூடாது என, பலரும் கட்சி மேலிடத்திடம் அறிவுறுத்துகின்றனர்.
மற்றொரு பக்கம் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு, சீட் அளிக்காவிட்டால், லோக்சபா தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக, உள்குத்து வேலை செய்வாரா என்ற அச்சமும், தலைவர்களை வாட்டி வதைக்கிறது.
இவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என கூறப்படுவதால், உத்தரகன்னடா தொகுதியில் பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். இத்தொகுதி ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுக்காவிட்டால், தான் போட்டியிட தயாராக இருப்பதாக ஆனந்த் அஸ்னோதிகர், சூரஜ் நாயக் சோனி கூறியுள்ளனர்.