மைசூரில் அமித் ஷா இன்று முக்கிய முடிவு
மைசூரில் அமித் ஷா இன்று முக்கிய முடிவு
மைசூரில் அமித் ஷா இன்று முக்கிய முடிவு
ADDED : பிப் 10, 2024 11:56 PM
பெங்களூரு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா தேர்தல் குறித்து மைசூரில் இன்று கர்நாடக பா.ஜ., தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, புதுடில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்றிரவு மைசூரு வந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில், பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நகரின் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இன்று காலை சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, பின், சுத்துார் மடத்தின் திருவிழாவில் பங்கேற்கிறார்.
மதியம் 2:40 மணி முதல், 3:15 மணி வரை, மாநில முக்கிய தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி உட்பட முக்கிய தலைவர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர்.
வெறும், 35 நிமிடங்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் குறித்து அமித் ஷா அலோசனை கூறுகிறார். தேர்தல் பணி மேற்கொள்வது, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது, கூட்டணி கட்சியான ம.ஜ.த., தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, மூத்த தலைவர்களின் ஆலோசனை பெறுவது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் அரசின் தோல்விகள் குறித்தும், மத்திய அரசின் சாதனைகள் குறித்தும், மக்களிடம் விளக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது.
இதற்கிடையில், மாநில தலைவர்களுக்கு எத்தகைய இலக்கு நிர்ணயிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.