விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
ADDED : ஜூன் 14, 2025 04:16 PM

புதுடில்லி: ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வுக்கு பிறகு நடந்தது என்ன என்பது குறித்து தெரிய வரும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்கள், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. ஆமதாபாத்தில் நடந்த விபத்து ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.
எனது தந்தையும் சாலை விபத்தில் இறந்தவர் தான். இதனால், விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
விபத்து குறித்து அறிந்ததும் எங்களுக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. முதலில் நாங்கள் நம்பவில்லை. நான் சம்பவ இடத்திற்கு சென்று, தேவையான உதவிகளை செய்தேன். நாங்கள் அங்கு சென்ற போது, குஜராத் அரசு ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். விமான விபத்துகள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவே என அமைக்கப்பட்ட விமான விபத்து புலனாய்வு பிரிவினர், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.
நேற்று கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான விஷயம். இதனை ஆய்வு செய்யும் போது விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மற்றும் விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியும். விமான விபத்துக்கான புலனாய்வு பிரிவினர் விசாரணை முடித்த உடன் கிடைக்கும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.