ஆமதாபாத் விமான விபத்து: போயிங் நிறுவனம் மீது வழக்கு
ஆமதாபாத் விமான விபத்து: போயிங் நிறுவனம் மீது வழக்கு
ஆமதாபாத் விமான விபத்து: போயிங் நிறுவனம் மீது வழக்கு
ADDED : செப் 18, 2025 11:55 PM

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில் ஏர் - இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 'போயிங்' மற்றும் எரிபொருள் சுவிட்ச் வழங்கிய 'ஹனிவெல்' நிறுவனங்கள் மீது, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஆமதபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, ஜூன் 12ல் ஏர் - இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.
'போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்' விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பேர் பயணித்தனர்.
விசாரணை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதி மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேசமயம், மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்த 19 பேர் பலியாகினர்.
மொத்தம், 260 பேரை பலிவாங்கிய விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் இருந்து எரிபொருள் சுவிட்சுகள் நிறுத்தப்பட்டதால் இன்ஜின்கள் செயலிழந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இருப்பினும், அந்த சுவிட்சுகள் எப்படி நின்றது என்ற விபரங்கள் தெரியாத நிலையில், விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த காந்தபென் திருபாய் பகடல், நாவ்யா சிராக் பகடல், குபேர்பாய் படேல் மற்றும் பாபிபென் படேல் ஆகியோரின் குடும்பத்தினர், அமெரிக்காவின் டெலாவர் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நடவடிக்கை அதில், 'விபத்துக்கு எரிபொருள் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதே காரணம் என கூறப்படும் நிலையில், விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம் மற்றும் எரிபொருள் சுவிட்சுகள் வழங்கிய ஹனிவெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'இந்த இரு நிறுவனங்களும் எரிபொருள் சுவிட்சுகளின் நிலையை முறையாக ஆய்வு செய்திருந்தால், இந்த விபத்து நிகழ்ந்திருக்காது.
'விபத்துக்கு இரு நிறுவனங்களும் பொறுப்பு. எனவே, உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தர வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக, அமெரிக்காவில் பதியப்பட்ட முதல் வழக்கு இதுதான்.