ஆமதாபாத் விபத்து - விமானம் கிளம்பும் வரை எந்த பிரச்னையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்
ஆமதாபாத் விபத்து - விமானம் கிளம்பும் வரை எந்த பிரச்னையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்
ஆமதாபாத் விபத்து - விமானம் கிளம்பும் வரை எந்த பிரச்னையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்
UPDATED : ஜூன் 19, 2025 10:04 PM
ADDED : ஜூன் 19, 2025 08:02 PM

புதுடில்லி: '' ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787- 8 ட்ரீம் லைனர் விமானத்தின் வலது பக்க இன்ஜீன் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டது. விமானம் கிளம்பி செல்லும் வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை,'' என அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 30 வினாடிகளில் கீழே நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விமானங்களின் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்த டிஜிசிஏ உத்தரவிட்டு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் குறித்தும், விபத்து குறித்தும் பல்வேறு தகவல் வெளியாகிவருகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: விமானம் குறித்து, முக்கிய தகவல்களை உங்களிடம் பகிரந்து கொள்ள விரும்புகிறோம். இந்த விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது. கடைசியாக 2023 ஜூன் மாதம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அடுத்த சோதனை 2025 டிச., மாதம் நடைபெற இருந்தது. விமானத்தின் வலது பக்க இன்ஜின் 2025 ல் பழுது கண்டறியப்பட்டு மாற்றப்பட்டது. இடது இன்ஜின் ஏப்., மாதம் ஆய்வு செய்யப்பட்டது.
இரண்டு இன்ஜின்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விமானம் கிளம்பும் முன்னர் வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை. இன்றைய தேதி வரை நாங்கள் அறிந்த உண்மை இதுவாகும். அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக, நாங்களும், விமான போக்குவரத்து துறையும் காத்திருக்கிறோம்.
விமான விபத்தைத் தொடர்ந்து கடந்த 14 ம் தேதி டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எங்களின் 33 போயிங் 787 வகை விமானங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 26 விமானங்கள் பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, போயிங் 787 விமானத்தை டிஜிசிஏ உறுதி செய்துள்ளதுடன், பறப்பதற்கு தேவையான பராமரிப்பை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.