காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
ADDED : ஜூன் 19, 2025 08:27 PM

சென்னை: திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அறிக்கை:
தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் தி.மு.க.,வின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, கடுமையான கண்டனத்துக்குரியது.
தனது தேர்தல் வாக்குறுதி எண் 389ல், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, மொத்தம் 20 ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியிருந்ததை, நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தற்போது இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வரவிருப்பதால், குழப்பமான ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது திமுக அரசு.
இந்த அரசாணையின்படி, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவல்துறையினருக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்கு, மொத்தம் 23 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மொத்தம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தவா நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்வி, காவல்துறையிடையே எழுந்துள்ளது. இந்தத் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க, தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததைப் போல, காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.