'மால்கானா'க்கள் பாதுகாப்பில் கூடுதல் போலீசார் நியமனம்
'மால்கானா'க்கள் பாதுகாப்பில் கூடுதல் போலீசார் நியமனம்
'மால்கானா'க்கள் பாதுகாப்பில் கூடுதல் போலீசார் நியமனம்
ADDED : ஜூன் 03, 2025 08:57 PM
புதுடில்லி:போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 1.5 கோடி ரூபாய் திருடப்பட்ட வழக்கில், தலைமை காவலர் கைதானதை அடுத்து, போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள மால்கானாக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 20 போலீசார் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி லோதி ரோடு போலீஸ் ஸ்டேஷனில், பயங்கரவாதிகள் தொடர்பான பல முக்கிய குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன. இதனால், அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கும் அறையான மால்கானாவில், பணம், நகைகள் நிறைய இருக்கின்றன.
அவற்றை பாதுகாக்கும் பணியில், ஆறு - ஏழு போலீசார் மட்டுமே இருந்தனர். எனினும், 24 மணி நேரமும் கேமராவின் கண்காணிப்பில் அந்த அறை இருக்கும்.
இந்நிலையில், லோதி ரோடு அலுவலக போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு போலீஸ் பிரிவில், தலைமை காவலராக இருந்தவர் குரேஷி. இவர், சில நாட்களுக்கு முன், கிழக்கு டில்லி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது, அவர் பணியாற்றிய முந்தைய போலீஸ் ஸ்டேஷனின் மால்கானாவில் இருந்த, 1.5 கோடி ரூபாயை திருடி சென்று விட்டார்.
இதை தாமதமாக அறிந்த லோடி ரோடு போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் ஒருவர், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி, அவர் தான் இந்த குற்றத்தை செய்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, கிழக்கு டில்லி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஏட்டு குரேஷி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளி ஆனதால், இந்த திருட்டை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும், மால்கானாக்களின் பாதுகாப்பை பலப்படுத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன், 10 - 12 போலீசார் பாதுகாப்பில் மால்கானா அறைகளின் பாதுகாப்பிற்கு, 20 போலீசார் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.