நடிகை சுமலதா காங்கிரசில் சேர வாய்ப்பு? ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடா 'குண்டு'
நடிகை சுமலதா காங்கிரசில் சேர வாய்ப்பு? ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடா 'குண்டு'
நடிகை சுமலதா காங்கிரசில் சேர வாய்ப்பு? ம.ஜ.த.,வின் ஜி.டி.தேவகவுடா 'குண்டு'
ADDED : பிப் 10, 2024 06:06 AM

பெங்களூரு: ''ம.ஜ..த.,வுக்கு ஆறு தொகுதிகளை விட்டுத்தரும்படி, பா.ஜ.,விடம் கேட்டுள்ளோம். மாண்டியா தொகுதியில், சுமலதா அம்பரிஷ் களமிறங்கினால் வரவேற்கிறோம். ஆனால் அவர் காங்கிரசுக்கு செல்கிறார் என்ற சந்தேகம் உள்ளது,'' என ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா புது குண்டு வீசியுள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் சுமலதா அம்பரிஷ். பா.ஜ.,வுடன் அடையாளம் காணப்படும் இவர், பகிரங்க ஆதரவு தெரிவித்திருந்தார். இம்முறை தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட விரும்பினார்.
இதற்கிடையில், லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. எனவே மாண்டியா தொகுதி, ம.ஜ.த.,வுக்கு விட்டுத் தரப்படலாம். தொகுதி கை நழுவும் என, சுமலதா அஞ்சுகிறார். டில்லிக்கு சென்று பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து, மாண்டியா தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கும்படி கோரியுள்ளார்.
இந்நிலையில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா கூறியதாவது:
மாண்டியா தொகுதியில், சுமலதா போட்டியிட்டால், நாங்கள் வரவேற்போம். ஆனால் அவர் காங்கிரசுக்கு செல்வார் என்ற சந்தேகம் உள்ளது. கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்ற இவர் பா.ஜ.,வுடன் அடையாளம் காணப்பட்டார்.
இவரது வெற்றிக்காக உழைத்த, முன்னாள் அமைச்சர் நாராயண கவுடா, தற்போது முதல்வர் சித்தராமையா வீட்டில் அமர்ந்திருக்கிறார். எனவே, சுமலதாவும் காங்கிரசுக்கு செல்லக்கூடும் என, நாங்கள் சந்தேகிக்கிறோம்.
துமகூரு, ஹாசன், மாண்டியா, மைசூரு, கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு வடக்கு தொகுதிகளில், ஏதாவது ஆறு தொகுதிகளை ம.ஜ.த.,வுக்கு விட்டுத் தரும்படி, பா.ஜ.,விடம் கேட்டுள்ளோம். தேவகவுடா குடும்பத்தை சேர்ந்த குமாரசாமி, நிகில் குமாரசாமி என, இருவரில் ஒருவர் மாண்டியாவில் வேட்பாளராக வாய்ப்புள்ளது. நிகில் மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
மாநிலத்தில் காங்கிரசின் அடக்குமுறை, அராஜகம் அதிகரித்துள்ளது. பா.ஜ.,வுடன் இணைந்து, 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ம.ஜ.த.,வுக்கு, மாண்டியா தொகுதியை விட்டு கொடுக்க பா.ஜ., சார்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதனால், உஷாரான அந்த தொகுதி சுயேச்சை எம்.பி., சுமலதா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ் ஆகியோரை நேற்று முன்தினம் டில்லியில் சந்தித்து, மாண்டியாவில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி வலியுறுத்தினார்.
அவர்களும், பரிசீலித்து சொல்வதாக மட்டும் கூறி அனுப்பி உள்ளனர். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புதுடில்லியில் சந்தித்து, சுமலதா ஆலோசனை நடத்தினார்.
அவரிடமும், மாண்டியா தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தரும்படி கேட்டு கொண்டார்.
பிரதமர் சந்திப்பு குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் சுமலதா குறிப்பிட்டுள்ளதாவது:
மாண்டியா லோக்சபா தொகுதிக்கு தொடர்புடைய முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்க, எனக்கு நேரம் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. உலக தலைவராக விளங்கும் மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக, வெற்றி பாதையில் நாட்டை முன் நடத்தி வந்துள்ளார்.
பொருளாதாரம், சமூகம், கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கு, அவரது தலைமை பண்பு தான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள், எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி.
உங்களுடைய ஆட்சி காலத்தில், நானும் பார்லிமென்டில் பணியாற்றியது எனது பாக்கியம். வரும் நாட்களில் தொடர்ந்து வேலை செய்வோம் என்று அவர் கூறிய வார்த்தை, எனக்கு ஊக்கமளிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.