லட்டு தந்து கூட்டு பாலியல் பலாத்காரம்; ஆசிரம சாமியார் மீது வீராங்கனை புகார்
லட்டு தந்து கூட்டு பாலியல் பலாத்காரம்; ஆசிரம சாமியார் மீது வீராங்கனை புகார்
லட்டு தந்து கூட்டு பாலியல் பலாத்காரம்; ஆசிரம சாமியார் மீது வீராங்கனை புகார்
ADDED : ஜூன் 02, 2025 05:16 AM

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், ஆசிரமத்துக்கு சென்ற தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனைக்கு மயக்க மருந்து கலந்த லட்டு தந்து சாமியார் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் கான்பூரில் உள்ள கோவிந்த நகரைச் சேர்ந்த தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனை ஒருவர், பழைய துணிகளை விற்பனை செய்வதற்கான கடை அமைப்பதற்காக இடம் தேடி வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் மஹ்தோ என்பவர் பழக்கமானார்.
அப்பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றால், உள்ளூரைச் சேர்ந்த பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும், அவர்கள் வாயிலாக கடை வைக்க எளிதில் இடம் கிடைக்கும் என்று அந்த பெண்ணிடம் கோவிந்த் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதை நம்பி, அதே பகுதியில் உள்ள ஆசிரமத்துக்கு கோவிந்துடன் அந்த பெண் சென்றார். அங்கு ஆசிரமத்தின் தலைமை சாமியார் உட்பட பலர் இருந்தனர். அப்போது, அந்த பெண்ணுக்கு சாப்பிடுவதற்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டது.
அதை சாப்பிட்ட அடுத்த சில நொடிகளில், அந்த பெண் மயக்கமானார். இதையடுத்து, கோவிந்த், தலைமை சாமியார் உட்பட நான்கு பேர் அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஜனவரியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, கான்பூர் போலீசாரிடம் சமீபத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.
நீதி கேட்க ஆசிரமம் சென்ற போது அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறி, அது தொடர்பான வீடியோவையும் புகாருடன் போலீசில் அந்த பெண் சமர்ப்பித்தார். சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளித்தது குறித்து போலீசார் கேள்வி எழுப்பிய போது, 'சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு அரசியல் ரீதியாக நட்பு இருந்ததால் புகார் அளிக்க பயந்தேன்', என, அந்த பெண் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஆசிரமத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, சம்பவம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் பங்கேற்றதாக தலைமை சாமியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இரு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.