Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைப்பு!: பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார்

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைப்பு!: பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார்

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைப்பு!: பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார்

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைப்பு!: பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார்

ADDED : ஜூன் 23, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் இருந்து, சிறைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவரும் ஒரு சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.

பவித்ரா கவுடாவுக்கு, தர்ஷனின் ரசிகரான சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி, 33, என்பவர் அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பினார்.

தன் மர்ம உறுப்பையும் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார்.

139 பொருட்கள்


இந்த கொலை அம்பலமான பின், தர்ஷன், பவித்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 11ம் தேதி தர்ஷன் உட்பட 13 பேரை, பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் காவலில் எடுத்தனர்.

கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக் கம்பி, பெல்ட்டுகள், ரேணுகா சாமி உடலில் மின்சாரம் பாய்ச்ச பயன்படுத்திய எலக்ட்ரிக் டார்ச் லைட் உட்பட 139 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சாட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 15ம் தேதி, 13 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை கூடுதலாக ஐந்து நாட்கள் காவலில் எடுத்தனர்.

கடந்த 20ம் தேதி தர்ஷன் உட்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தர்ஷன், கைதான வினய், தன்ராஜ், பிரதோஷ் ஆகிய நான்கு பேரும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி இவர்களை மீண்டும் போலீஸ் காவலில் நீதிபதி ஒப்படைத்தார்.

பவித்ரா உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரசிகர்கள் கோஷம்


இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, பணப் பரிமாற்றம் குறித்து, தர்ஷன் உட்பட நான்கு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் நான்கு பேரின் போலீஸ் காவலும் நிறைவு பெற்றது.

பெங்களூரு மாஜிஸ்திரேட் மற்றும் 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நான்கு பேரையும், ஜூலை 4ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தர்ஷன் உட்பட நான்கு பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து போலீஸ் வேன் வெளியே வந்தபோது, சாலையில் கூடி நின்ற ரசிகர்கள் தர்ஷனை பார்த்து, 'டி பாஸ்... டி பாஸ்... டி பாஸ்' என, உற்சாகமாக கோஷம் எழுப்பினர். ரசிகர்களை பார்த்து கையை அசைத்தபடி தர்ஷன் சென்றார்.

கைதி எண்


பரப்பன அக்ரஹாரா சிறை முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட தர்ஷன் உட்பட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தர்ஷனுக்கு கைதி எண்ணாக 6106 கொடுக்கப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்கு பின்பு சிறை

நடிகர் தர்ஷன், சிறைக்குச் செல்வது இது முதல் முறை இல்லை. 2011ல் மனைவி விஜயலட்சுமியை தாக்கியதற்காக, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 13 ஆண்டுகள் கழித்து கொலை வழக்கில் கைதாகி, அந்த சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார்.



தர்ஷனை யானையுடன் ஒப்பீடு

ரேணுகா சாமி கொலை குறித்து, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'நாய் என்று கூறி ரேணுகா சாமியை அவமதிப்பதாக நினைக்க வேண்டாம். யானை பெரிய உருவம் கொண்டது. நாய் சிறிய பிராணி. தர்ஷன், ரேணுகா சாமியை தாக்கிக் கொன்றது கண்டிக்கத்தக்கது' என, பதிவிட்டு உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us