சாதாரண மிதி வண்டியை மின்சார சைக்கிளாக மாற்றிய மெக்கானிக்
சாதாரண மிதி வண்டியை மின்சார சைக்கிளாக மாற்றிய மெக்கானிக்
சாதாரண மிதி வண்டியை மின்சார சைக்கிளாக மாற்றிய மெக்கானிக்
ADDED : பிப் 24, 2024 11:00 PM

இன்றைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களை விட, மின்சார வாகனங்களை பயன்படுத்துவதையே அதிகம் பேர் விரும்புகின்றனர். எரிபொருட்களின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், மின்சார வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, துமகூரு உட்பட பல நகரங்களில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இத்தகைய வாகனங்களின் பதிவும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஹாசனை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தன் சாதாரண சைக்கிளை, மின்சார சைக்கிளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சைக்கிளை பார்த்து, ஆச்சரியமடையாதோர் இருக்கவே முடியாது.
ஹாசனில் கேரேஜ் ஒன்றில், மெக்கானிக்காக பணியாற்றுபவர் சமீர் பாஷா, 50. இவர் பணிக்குச் செல்ல, சாதாரண சைக்கிளை பயன்படுத்தினார்.
சாலைகளில் மின்சார வாகனங்கள் இயங்குவதை பார்த்த இவருக்கு, தன் சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றினால் என்ன என தோன்றியது. அதை உடனடியாக செயல்படுத்தினார்.
மூன்று வாரங்கள் பணியாற்றி, மிக அருமையான மின்சார சைக்கிளை உருவாக்கினார். பேட்டரி, ஹெட்லைட், ஒரு கேரியர், சைக்கிள் ஸ்டாண்ட் என தேவையான சாதனங்களை பொருத்தியுள்ளார். 35 கி.மீ., வேகத்தில் 60 கி.மீ., பயணிக்கலாம். இதற்காக 60,000 ரூபாய் செலவிட்டுள்ளார்.
இதை கால் வலிக்க 'பெடல்' மிதிக்க தேவையில்லை.
தற்போது அனைத்து இடங்களுக்கும், இதே சைக்கிளில் ஜம்மென்று வலம் வருகிறார்.
யாருக்காவது மின்சார சைக்கிள் தயாரித்து தர வேண்டுமானால், தயாரித்து தருகிறார். எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலையில், இது போன்ற சைக்கிள் உதவியாக இருக்கும். பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறதே என, வருந்த வேண்டிய அவசியமும் இருக்காது. சமீர் பாஷா மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார்
நமது நிருபர் -.