'பாகிஸ்தானால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போர் உத்தி'
'பாகிஸ்தானால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போர் உத்தி'
'பாகிஸ்தானால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போர் உத்தி'
ADDED : மே 28, 2025 03:38 AM

காந்திநகர் : “பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல் மறைமுக போர் அல்ல; இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போர் உத்தி,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாளாக நேற்று, குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
காந்தி நகரில் உள்ள மஹாத்மா மந்திரில், 'குஜராத் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025' என்ற நிகழ்வை பிரதமர் துவக்கி வைத்தார்.
வெல்ல முடியாது
அப்போது 5,536 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
உலகம் ஒரு குடும்பம் என்பது நம் பாரம்பரியம்; நமக்கு சொல்லிக் கொடுத்த மதிப்பு. எனவே, நம் அண்டை நாடுகளும் மகிழ்ச்சியுடன் இருப்பதை நாம் விரும்புகிறோம். ஆனால், நம் வலிமையை கேள்விக்குள்ளாக்கும்போது, எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?
இது வீரர்களின் பூமி என்பதை நிரூபிக்க வேண்டாமா? ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளின் மேல், பாகிஸ்தானின் கொடி போர்த்தப்பட்டது.
பாக்., ராணுவத்தினர், இறந்தவர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் மறைமுக போர் அல்ல; பாகிஸ்தானின் போர் உத்தி என்பதை இது நிரூபிக்கிறது. அவர்கள் போரில் ஈடுபட்டால், அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
பயங்வரவாதத்தை ஒழிக்க முடிவு செய்த இந்திய படைகள், அதை உறுதியாகவும், திறம்படவும் நிறைவேற்றி உள்ளன. பாகிஸ்தானை இந்தியா ஒவ்வொரு முறையும் தோற்கடித்து வருகிறது.
நம்மை வெல்ல முடியாது என்பதை அந்நாடு புரிந்து கொண்டு உள்ளது. இதனாலேயே, மறைமுக போரை அந்நாடு நடத்தி வருகிறது.
இதற்கு முன், பாகிஸ்தானில் ஊடுருவி நாம்தாக்குதல் நடத்திய போது, உள்நாட்டில் சிலர் அதற்கு ஆதாரம் கேட்டனர்.
ஆதாரம் கேட்கவில்லை
ஆனால், இப்போது நாம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை, வெறும் 22 நிமிடங்களில் தகர்த்தோம். இந்த தாக்குதல்களை நம் கேமராக்கள் பதிவு செய்தன. அதனால், இந்த தாக்குதல்களுக்கு யாரும் ஆதாரம் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, காந்திநகர் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் வாகனத்தில் சென்ற பிரதமர் மோடி, அவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.