தனியாருடன் சேர்ந்து போர் விமானம் தயாரிக்க அனுமதி! வான் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதி
தனியாருடன் சேர்ந்து போர் விமானம் தயாரிக்க அனுமதி! வான் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதி
தனியாருடன் சேர்ந்து போர் விமானம் தயாரிக்க அனுமதி! வான் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதி
ADDED : மே 28, 2025 03:26 AM

புதுடில்லி: எதிரி நாட்டு ரேடார் உட்பட எவ்வித நவீன தொழில்நுட்ப கண்காணிப்பிலும் சிக்காமல் பதுங்கி பாயும் அதிநவீன, 'ஸ்டெல்த்' போர் விமானங்களை தனியாருடன் சேர்ந்து உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏ.எம்.சி.ஏ., என்றழைக்கப்படும், மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை ஒருசில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. இது, 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையில், அமெரிக்கா, 'எப் 22 ராப்டர், எப்35 லைட்னிங் 2' ஆகிய இரு ஸ்டெல்த் போர் விமானங்களை வைத்துள்ளது.
சீனாவிடம், 'ஜே20 மைட்டி டிராகன்' மற்றும் ரஷ்யாவிடம், 'சுகோய் சு57' ஆகிய ஸ்டெல்த் போர் விமானங்கள் உள்ளன.
ரூ.15,000 கோடி
அந்த வரிசையில், நம் நாட்டுக்கான முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை தயாரிக்கும் முயற்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இதற்காக, 15,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த வகை போர் விமானங்களை தயாரிக்க, 10 ஆண்டுகள் ஆகும் என்றும், 2035ல் நம் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் படையில் சேர்க்கப்படும் என்றும், டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமிர் வி காமத் உறுதி அளித்தார்.
இதற்கான பணிகள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஸ்டெல்த் போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான பணிகளை துவங்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
இந்த தகவலை நம் ராணுவ அமைச்சகம் நேற்று உறுதி செய்தது.
ஏ.டி.ஏ., என்றழைக்கப்படும், விமான மேம்பாட்டு முகமை இந்த பணிக்கு தலைமை ஏற்றுள்ளது. போர் விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த பணிகள் முழுவீச்சில் துவங்க உள்ளன.
அவசரம்
சீனா, ஆறாம் தலைமுறை ஜே36 போர் விமானத்தை தயாரித்து, அதை வெற்றிகரமாக சோதனையும் செய்து முடித்துள்ளது.
மேலும், சீனாவின் அதிநவீன ஜே10 போர் விமானத்தை பாகிஸ்தான் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. மேலும், சீன ஸ்டெல்த் போர் விமானமான ஜே35 விமானத்தை பாகிஸ்தானுக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் தான், நம் வான் படை பலத்தை அதிகரிக்கவும், நம் நாட்டின் முதல் ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கவும் மத்திய அரசு அவசரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.