Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நுாற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டிஷாரின் விருந்தினர் இல்லம்

நுாற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டிஷாரின் விருந்தினர் இல்லம்

நுாற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டிஷாரின் விருந்தினர் இல்லம்

நுாற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டிஷாரின் விருந்தினர் இல்லம்

ADDED : ஜன 25, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த, அடர்த்தியான வனப்பகுதி என்றால், யாருக்குத்தான் பிடிக்காது. கர்நாடகாவில் இத்தகைய வனப்பகுதி ஏராளம். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன.

இவற்றில் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டில் உள்ள பண்டிப்பூர் தேசிய பூங்காவும் ஒன்றாகும். பண்டிப்பூர் புலிகள் சரணாலயமாகும். கர்நாடகா, தமிழகம், கேரளா என மூன்று மாநிலங்களை ஒட்டியுள்ளது.

பண்டிப்பூர் நாட்டின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த வனத்தில் சபாரி செய்வது என்றால், சுற்றுலா பயணியருக்கு மிகவும் விருப்பமாகும். சமீபத்தில் மழை பெய்ததால், பண்டிப்பூர் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

ஆங்காங்கே நடமாடும் காட்டு யானைகள், கர்ஜிக்கும் புலிகள், கூட்டம், கூட்டமாக நடமாடும் மான்கள், முயல்கள், காட்டெறுமை, கரடி உட்பட விலங்குகள், பறவைகள் ஆகியவை சுற்றுலா பயணியரை கவர்கின்றன.

ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில், தொடர் விடுமுறை கிடைத்ததால், பண்டிப்பூருக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குடும்பத்தினர், நண்பர்களுடன் வருகின்றனர். பலரும் இங்கு சபாரியில் தென்பட்ட காட்சிகளை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

அங்கு தாங்கள் கண்ட அற்புத காட்சிகள், சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால், வெளி நாட்டவர்பண்டிப்பூருக்கு ஆர்வத்துடன் வருகின்றனர்.

இந்தியர்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலேயர்களுக்கும் பண்டிப்பூர் வனம் பிடித்தமானதாக இருந்தது என்பதற்கு, அவர்கள் கட்டிய விருந்தினர் இல்லமே, உதாரணமாக உள்ளது. வனப்பகுதியின் அழகை ரசித்தனர்.

இவர்கள் வனத்தில் தங்கும் நோக்கில், விருந்தினர் இல்லம் கட்டினர். பண்டிப்பூர் மூலஹொளெ மண்டலத்தின், சம்மனஹள்ளி பகுதியில் இந்த இல்லம் கட்டப்பட்டது. நுாற்றாண்டை நிறைவு செய்த பெருமை, ஆங்கிலேயர் கட்டிய இல்லத்துக்கு உள்ளது.

கடந்த 1917ல், கற்கள், செங்கல், மணல் பயன்படுத்தி இல்லம் கட்டப்பட்டது. மேற்கூரையில் மங்களூரு ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கட்டடம், அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள், மைசூரு உடையார் ஊட்டிக்கு சென்று, மைசூருக்கு திரும்பும் போது வழியில் ஓய்வெடுக்க உதவியாக இருந்ததாம். அதிகாரிகளும், மைசூரு உடையாரும் இரவு இந்த இல்லத்தில் தங்கி, அதிகாலையில் வனத்தில் சுதந்திரமாக நடமாடும் விலங்குகளை ரசித்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்த கட்டடத்தை விருந்தினர் இல்லமாக வனத்துறை பயன்படுத்துகிறது. 2000ல் இந்த இல்லத்தின் மேற்கூரையில், கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டது.

வன விலங்குகள் நடமாட்டத்தை பார்க்க, கோபுரம் உதவியாக உள்ளது. இதன் மீது நின்று பார்த்தால், கேரளா, ஹிமவத் கோபாலசுவாமி மலை, மூலஹெளே, பண்டிப்பூர் வனப்பகுதி தெரியும். கோடைக்காலத்தில் காட்டுத்தீ தென்பட்டால், அதை கண்டுபிடித்து உடனடியாக தீயை கட்டுப்படுத்த வசதியாக உள்ளது.

பண்டிப்பூர் விருந்தினர் இல்லத்தின் மீது, மக்கள் பிரதிநிதிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு கண் உள்ளது. விடுமுறை நாட்களில் இங்கு தங்க, பலத்த போட்டியே ஏற்படும். அமைச்சர்களிடம் மன்றாடி, அவர்களின் உதவியுடன் தங்குவர்.

ஜாலியாக பொழுது போக்கவும், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் இங்கு வருவதுண்டு. அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று, மீண்டும் அழைத்து வருவதே வனத்துறை ஊழியர்களுக்கு, பெரிய தலைவலியாக இருந்தது.

சுற்றுச்சூழல் மண்டலத்தில், வாகனங்கள் போக்குவரத்தாலும், இங்கு வருவோரின் சத்தம், கூச்சலாலும் வன விலங்குகள் பாதிப்படைந்தன. இதை கண்ட வனத்துறையினர், விருந்தினர் இல்லத்தில் பொது மக்கள் நுழைய தடை விதித்தனர்.

எனவே பண்டிப்பூர் விருந்தினர் இல்லம், சத்தமின்றி அமைதியாக உள்ளது. வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களை தவிர யாரும் இங்கு வருவதில்லை.

விருந்தினர் இல்லத்தின் வெளிச்சத்துக்கு, சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இல்லத்தின் அருகில் ஆழ்துளை கிணற்றில் இருந்து, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்கு நடுவில், மழை, காற்று, குளிருக்கு ஈடு கொடுத்து, வரலாற்றுக்கு சாட்சியாக நின்றுள்ள கட்டடத்துக்கு, பாரம்பரிய அங்கிகாரம் அளித்தால், இது மேலும் பிரபலமடையும் என்பது, வரலாற்று வல்லுனர்களின் விருப்பமாகும்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us