ஜம்கண்டி - அதோனி இடையே பாலம் பணிக்கு ரூ.99 கோடி நிதி
ஜம்கண்டி - அதோனி இடையே பாலம் பணிக்கு ரூ.99 கோடி நிதி
ஜம்கண்டி - அதோனி இடையே பாலம் பணிக்கு ரூ.99 கோடி நிதி
ADDED : பிப் 24, 2024 04:58 AM

பெங்களூரு : “கிருஷ்ணா நதி குறுக்கே ஜம்கண்டி - அதோனி இடையே பாலம் கட்டும் திட்டத்துக்கான செலவை, 60 கோடி ரூபாயில் இருந்து 99 கோடி ரூபாயாக உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பாலத்தின் பணிகள் விரைவில் துவங்கும்,” என, சட்டமேலவையில் துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சட்டமேலவையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., உறுப்பினர் ஹனுமந்தப்பா நிராணி: கிருஷ்ணா நிதி குறுக்கு ஜம்கண்டி - அதோனி இடையே பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் சிவகுமார்: இந்த விவகாரத்தில் எங்கள் துறை தவறு செய்துள்ளது. ஏனெனில், பாலத்தின் உயரத்தை மதிப்பிடும்போது, அவர்கள் சரியாக செய்யவில்லை. இதற்கான ஒப்பந்தம் தாவணகெரே ஒப்பந்ததாரிடம் கொடுக்கப்பட்டது. முதலில் 24 மாதங்களில் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக, இப்பாலம் 480 மீட்டர் நீளமும், 533 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்போது பாலத்தின் அளவு திருத்தப்பட்டு, 680 மீட்டர் நீளமும், 534 மீட்டர் உயரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இதன் மதிப்பீடு, 60 கோடி ரூபாயில் இருந்து 99 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு துணைகுழு அனுமதி அளித்து, நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 40 கோடி ரூபாய் கூடுதலாக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பாலத்தின் பணிகள் விரைவில் துவங்கும்.
பா.ஜ., - சதீஷ்: குடிநீர் பிரச்னை, சந்துார் ஏரியை நிரப்பும் திட்டம், கோட்டூர் பகுதியில் உள்ள 16 ஏரிகள் எப்போது நிரப்பப்படும்.
துணை முதல்வர்: சந்துார் ஏரி, கேட்டூரில் உள்ள 16 ஏரிகள், 399 கோடி ரூபாய் செலவில் நிரப்பப்படும். பத்ரா மேலணை திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து 5,300 கோடி ரூபாய் நிதி வர வேண்டும்.
இது தொடர்பாக பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையிட்டும் பணம் வரவில்லை. மாநில பட்ஜெட்டும் 19,000 கோடி ரூபாயில் இருந்து 15,000 கோடி ரூபாய குறைந்து உள்ளது. வரும் நாட்களில் நிதியை பொருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
நீர்ப்பாசன துறையில் ஏற்கனவே, 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நடந்து வரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் 10 முதல் 15 சதவீதம் பில் செலுத்தும் நிலை உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.