ADDED : ஜன 31, 2024 01:28 AM

மூணாறு:கேரள மாநிலம், கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகள், ஆண் நண்பருடன் 2022 மே 29ல் பூப்பாறைக்கு சென்றார்.
அங்கு பேசிக் கொண்டிருந்த சிறுமியை, பூப்பாறை லட்சம் காலனியை சேர்ந்த சாமுவேல், 22, அரவிந்த், பூப்பாறைக்கு பணிக்கு வந்த தேனி மாவட்டம், போடி தர்மத்துபட்டியைச் சேர்ந்த சிவகுமார், 19, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா வலவூரைச் சேர்ந்த சுகந்த், 22, மற்றும் இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை விரட்டிவிட்டனர்.
பின்னர், சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சாந்தாம்பாறை போலீசார் ஆறு பேரையும் கைது செய்தனர். தொடுபுழா சிறார் நீதிமன்றத்தில் இரு சிறுவர்கள் மீதான வழக்கு நடந்து வருகிறது.
மீதமுள்ள நான்கு பேர் மீதான வழக்கு, தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு இல்லை எனக் கூறி, நேற்று முன்தினம் அவரை விடுவித்த நீதிபதி, குற்றவாளிகளான சாமுவேல், சிவகுமார், சுகந்த் ஆகிய மூவருக்கும் தலா, 90 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், மூவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டார்.