Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/9 அமைச்சர்கள் 'ஆப்சென்ட்!'

9 அமைச்சர்கள் 'ஆப்சென்ட்!'

9 அமைச்சர்கள் 'ஆப்சென்ட்!'

9 அமைச்சர்கள் 'ஆப்சென்ட்!'

ADDED : பிப் 25, 2024 02:35 AM


Google News
பெங்களூரு- துணை முதல்வர் சிவகுமார் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்தில், முதல்வர் சித்தராமையா அணியைச் சேர்ந்த ஒன்பது அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள் நடவடிக்கையால், காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. லோக்சபா தேர்தலுக்குள், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தனர்; அதன்படி நிறைவேற்றியும் உள்ளனர்.

இதன் மூலம் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில், 20ல் வெற்றி பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் கணக்காக இருந்தது.

ஆனால், சற்றும் எதிர்பாராத திருப்பமாக பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது.

லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

வாரிசுகளுக்கு 'சீட்'


அதே மாதிரி தற்போதும் ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்றால், ஆளுங்கட்சியாக இருந்தும் ஒற்றை இலக்கை தாண்ட முடியவில்லை என, எதிர்க்கட்சிகளின் கேலி, கிண்டலை சந்திக்க நேரிடும்.

அதனால் லோக்சபா தேர்தலை, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் கவுரவ பிரச்னையாக எடுத்துள்ளனர்; வெற்றி பெறும் வேட்பாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 'சீட்' தர நினைத்து உள்ளனர்.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், அமைச்சர்கள் சிலரை களமிறக்கவும், கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ள துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்கிறார்.

ஆனால், தங்கள் வாரிசுகளுக்கு 'சீட்' வாங்கிக் கொடுப்பதில், அமைச்சர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதற்கு சிவகுமார் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அமைச்சர்கள் சிலருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

முதல்வர் அணி

இந்நிலையில், ராஜ்யசபா, லோக்சபா தேர்தல்கள் குறித்து விவாதிக்க, பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள தன் வீட்டில், நேற்று முன்தினம் இரவு அமைச்சர்களுக்கு, சிவகுமார் விருந்து கொடுத்தார். இதில் கலந்து கொள்ள, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்த விருந்தில் அமைச்சர்கள் செலுவராயசாமி, சரண் பிரகாஷ் பாட்டீல், எம்.சி.சுதாகர், ஜமீர் அகமது கான், பிரியங்க் கார்கே, ஜார்ஜ், வெங்கடேஷ், பரமேஸ்வர், எம்.பி.பாட்டீல், மது பங்காரப்பா, லட்சுமி ஹெப்பால்கர், ஈஸ்வர் கன்ட்ரே, எச்.கே.பாட்டீல், சிவானந்த் பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சிவராஜ் தங்கடகி, நாகேந்திரா, தினேஷ் குண்டுராவ், டி.சுதாகர், மங்கள் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால், மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா, மல்லிகார்ஜுன், சந்தோஷ் லாட், சரணபசப்பா தர்ஷனாபுரா, ரஹீம் கான், கிருஷ்ண பைரே கவுடா, பைரதி சுரேஷ் ஆகிய ஒன்பது அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

இவர்கள் அனைவரும், முதல்வர் சித்தராமையாவின் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோருக்கும், சிவகுமாருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருகிறது.

கட்சிக்கு பாதகம்


அத்துடன் மற்ற ஆறு அமைச்சர்களுக்கும், சிவகுமாருக்கும் இடையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வருகிறது. சிவகுமாருக்கு அதிர்ச்சி கொடுக்கவே, ஒன்பது அமைச்சர்களும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்று கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர்களிடம், “லோக்சபா தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற, நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையாக உழைக்க வேண்டும்,” என, சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா ஆதரவு அமைச்சர்களுக்கும், சிவகுமாருக்கும் இடையில் நிலவும் மோதல் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த மோதல், கட்சிக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.

இது, மாநில காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சியின் நலனை விட, அமைச்சர்களுக்கு, கவுரவம் பெரிதாக போய் விட்டது' என, காங்கிரஸ் தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரசில் நிலவும் உட்கட்சி பிரச்னையை வைத்து, லோக்சபா தேர்தலில் பிரமாண்ட வெற்றியை பெற, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us