52 பாம்புகளை கொன்ற வீட்டில் 8 பாம்பு மீட்பு
52 பாம்புகளை கொன்ற வீட்டில் 8 பாம்பு மீட்பு
52 பாம்புகளை கொன்ற வீட்டில் 8 பாம்பு மீட்பு
ADDED : ஜூன் 04, 2025 08:41 PM
மீரட்,:உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன், 52 பாம்புகளைக் கொன்ற விவசாயி வீட்டில் இருந்து, எட்டு பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர்.
உ.பி., மாநிலம் மீரட் மாவட்டம் சமோலி கிராமத்தி வசிப்பவர் மஹ்பூஸ் சைபி. விவசாயி. இவரது வீட்டின் முற்றத்துக்கு, 1ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் கூட்டமாக வந்தன. அதில், 52 பாம்புகளை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.
இந்தக் காட்சிகளை சிலர் மொபைல் போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து, வனத்துறையினர் நேற்று முன் தினம் இரவு, மஹ்பூஸ் சைபி வீட்டில் ஆய்வு செய்தனர். வீட்டுக்குள் இருந்த, எட்டு பாம்புகளை மீட்டனர்.
மாவட்ட வன அதிகாரி ராஜேஷ் குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சைபி வீட்டில் மீட்கப்பட்ட பாம்புகள் விஷமற்ற இனத்தைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது. பாம்புகள் அந்த வீட்டில் முட்டையிட்டு இருக்கலாம். அவை இப்போது கட்டம் கட்டமாக குஞ்சு பொரிக்கின்றன. அதனால்தான் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டு நிறுவன ஆதித்யா திவாரி, “இந்தப் பாம்புகள், 'செக்கர்டு கீல்பேக்' என்ற தண்ணீர் பாம்பு வகையைச் சேர்ந்தவை. இந்த இனம் விஷமற்றது. ஒரு பெண் பாம்பு ஒரே நேரத்தில் 40 முதல் -50 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டவை,”என்றார்.
தொடர்ச்சியாக பாம்புகள் படையெடுத்து வருவதால், சமோலி கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.