கேரள பா.ஜ., பிரமுகர் கொலை; 8 பேருக்கு ஆயுள் தண்டனை
கேரள பா.ஜ., பிரமுகர் கொலை; 8 பேருக்கு ஆயுள் தண்டனை
கேரள பா.ஜ., பிரமுகர் கொலை; 8 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 25, 2025 02:17 AM

கண்ணுார் : கேரளாவில், பா.ஜ., பிரமுகர் எளம்பிலாய் சூரஜ், 32, கொலை செய்யப்பட்ட வழக்கில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுஉள்ளது.
கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள முழப்பிலங்காட் என்ற பகுதியைச் சேர்ந்தவர், எளம்பிலாய் சூரஜ். துவக்கத்தில் மார்க்.கம்யூ., கட்சியில் இருந்த அவர், பின், அதிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.
அரசியல் பகை காரணமாக, 2005 ஏப்., 7ல், பட்டப் பகலில் எளம்பிலாய் சூரஜை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.
இது தொடர்பாக, மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த பிரபாகரன், பத்மநாபன், பிரகாசன், டி.கே.ராஜீஷ், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த 12 பேரில், வழக்கு விசாரணையின் போது, ஷம்சுதீன், ரவீந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகதன்கோட்டை பிரகாசன், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
எளம்பிலாய் சூரஜ் கொலை வழக்கு தலசேரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர், சமீபத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஒன்பது பேருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்கனவே சிறையில் உள்ள டி.கே.ராஜீஷ், அவரது கூட்டாளிகள் யோகேஷ், ஷம்ஜித், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த பிரபாகரன், பத்மநாபன் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.