அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 வயது மூதாட்டி: கொடுமைப்படுத்தியதாக புகார்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 வயது மூதாட்டி: கொடுமைப்படுத்தியதாக புகார்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 வயது மூதாட்டி: கொடுமைப்படுத்தியதாக புகார்
ADDED : செப் 26, 2025 08:05 AM

நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 வயது இந்திய மூதாட்டியை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பஞ்சாபைச் சேர்ந்த 73 வயது சீக்கிய பெண் ஹர்ஜித் கவுரும் ஒருவர். 1992ம் ஆண்டு இரு மகன்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இவர், வடக்கு கலிபோர்னியாவின் கிழக்கு பே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாகக் கூறி ஹர்ஜித் கவுருடன் சேர்த்து 131 பேர் நாடு கடத்தப்பட்டனர். அப்போது, 73 வயது மூதாட்டியான ஹர்ஜித் கவுருக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல், அமெரிக்க அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக அவரது வக்கீல் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;நாடு கடத்தப்பட்ட போது, ஹர்ஜித் கவுருக்கு கை மற்றும் கால் விலங்குகளை போட அதிகாரி ஒருவர் முயன்றார். ஆனால், இவரின் வயதைக் காரணம் காட்டி, மற்றொரு அதிகாரி அதனை தடுத்து நிறுத்தினார். பிஸினஸ் வகுப்பு விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்குப் பதிலாக, ஒரு சிறிய ரக விமானத்தில் ஹர்ஜித் கவுர் உள்ளிட்டோரை அனுப்பி வைத்தனர்.
தடுப்பு மையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் வழங்கப்படவில்லை. படுக்கை கூட கொடுக்கவில்லை. இதனால், ஹர்ஜித் கவுர் தரையில் தூங்க வேண்டியிருந்தது. குளிக்க கூட அனுமதிக்கவில்லை. இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை ஏற்பட்டிருந்ததால், தரையில் இருந்து எழுந்திருக்க கவுருக்கு சிரமம் ஏற்பட்டது, இவ்வாறு கூறினார்.
மூதாட்டி நாடு கடத்தப்பட்டது குறித்து அவரது மருமகள் மஞ்சி கவுர் கூறுகையில், 'ஹர்ஜித் கவுரிடம் சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், சட்டத்திற்குட்பட்டு, 13 ஆண்டுகளாக 6 மாதத்திற்கு ஒருமுறை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச் சோதனை அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் வரி செலுத்தி வந்தார். அமெரிக்காவில் வசிக்க அவர் தகுதியானவர் தான்,' எனக் கூறினார்.