2030ல் '6ஜி' தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி., ஆய்வாளர் தகவல்
2030ல் '6ஜி' தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி., ஆய்வாளர் தகவல்
2030ல் '6ஜி' தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி., ஆய்வாளர் தகவல்
ADDED : செப் 17, 2025 03:03 AM

ஹைதராபாத் : 'தொலைத்தொடர்பு தொழில்நுட்பமான, '6ஜி' எனப்படும் ஆறாம் தலைமுறை தொழில்நுட்பம் இந்தியாவில் 2030ல் அறிமுகமாகும்' என, ஐ.ஐ.டி., ஹைதராபாதின் தொலைத்தொடர்பு ஆய்வாளரும், பேராசிரியருமான கிரண் குச்சி தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு துறையில், 'வயர்லெஸ் நெட்வொர்க்' எனப்படும், கம்பியில்லா அமைப்புக்கான தொழில்நுட்பம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மேம்படுத்தப்படுகிறது. இது, 'மொபைல் போன்' அழைப்பு மற்றும் அதிவேக இணைய பயன்பாட்டுக்கு உதவுகிறது.
தற்போது, '5ஜி' எனப்படும் ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ் நெட்வொர்க் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், '6ஜி' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆய்வு பணியில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த பணிகள் அங்கு உள்ள தொலைத்தொடர்பு ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான கிரண் குச்சி தலைமையில் நடக்கிறது.
அவர் கூறியதாவது:
ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும், உலகம் புதிய மொபைல் போன் தொழில்நுட்பத்தை வரவேற்கிறது. 2010 - 20 வரை, '5ஜி' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்தியாவில், 2022ல் '5ஜி' அறிமுகமானது.
அதே போல், '6ஜி'யை அறிமுகப்படுத்தும் பணி உலகளவில், 2021-ல் துவங்கியது. 2029-க்குள், '6ஜி' தொழில்நுட்பம் உலகளாவிய தரநிலைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், 2030-ல் அறிமுகமாகும்.
கடந்த, 10 ஆண்டுகளாக நாம் தொலைத்தொடர்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவிட்ட உழைப்பு மற்றும் முதலீடு பலனளிக்கத் துவங்கியுள்ளன.
இதனால், இந்தியா வெறுமனே '6ஜி' தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவராக மட்டும் இருக்காது.
உலக அளவில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குபவராகவும், அதற்கான தரநிலைகளை அமைப்பவராகவும் வளர்ந்து நிற்கும். '6ஜி' தொழில்நுட்பம், '5ஜி'யை விட வேகமானது மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இயங்கும். அதற்கான சிப்களை உருவாக்கி உள்ளோம்.
தானியங்கி வாகன இயக்கம், விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு மற்றும் பேரிடர் என அனைத்திலும் இது மேம்பட்ட அனுபவத்தை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.