கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி உ.பி., சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்த சோகம்
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி உ.பி., சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்த சோகம்
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி உ.பி., சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்த சோகம்
ADDED : ஜூன் 19, 2025 07:10 PM
புதுடில்லி:டில்லியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த மோசமான கார் விபத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், தீயில் கருகி பலியாகினர்.
டில்லி சாண்டாக் கிராசிங் அருகே ஜஹாங்கீராபாத் - புலந்த்சாகர் சாலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில், காரில் இருந்த, உ.பி.,யை பூர்வீகமாக கொண்ட, டில்லியில் தொழில் செய்து வரும் தன்வீஸ் அகமது, 26, அவரது மனைவி நிதா, சகோதரி 24, மாப்பிள்ளை ஜுபேர் அலி, அவரின், 2 வயது மகன் ஜஸ்நுல் ஆகியோர் இறந்தனர்.
படுகாயமடைந்து, காருக்குள் சிக்கி கிடந்த, 15 வயது சிறுமி குல்நாஸ், உயிர் பிழைத்தார். எனினும், படுகாயம் அடைந்திருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்து குறித்து, தன்வீஸ் அகமதுவின் தந்தை தன்வீர் அகமது கூறியதாவது:
உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நாங்கள், டில்லியில் பல தொழில்கள் செய்து வருகிறோம். நான், மெக்கானிக் ஆக உள்ளேன். என் மகனும், மருமகனும், உ.பி.,யின் படான் என்ற இடத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மகனின் காரில் சென்றிருந்தனர்.
நானும், என் மனைவியும் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று முன்தினம் இரவிலேயே டில்லி திரும்பி விட்டோம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் என்பதால், என் மகன் தன்வீஸ் மற்றும் குடும்பத்தினருடன், உ.பி.,யில் இருந்து கிளம்பி, நேற்று அதிகாலை டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், கார் விபத்தில், ஐந்து பேர் இறந்து விட்டதாகவும், உயிருடன் இருந்த குல்நாஸ் என்ற சிறுமி கொடுத்த போன் எண் படி, என்னை அழைப்பதாகவும் கூறினார்.
அதிகாலையில் இதுபோன்ற போன் அழைப்புகளை நான் கேட்டதில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின், என் உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றேன். இது போன்ற போன் அழைப்பு, யாருக்கும் வரக் கூடாது.
இவ்வாறு கூறி அழுதார்.
அந்த காரை, தன்வீஸ் அல்லது அவரது மாப்பிள்ளை ஜுபேர் அலி தான் ஓட்டியிருக்க வேண்டும். இந்த விபத்துக்கு, அந்த காரை ஓட்டியவர், துாங்கியது தான் காரணம் என கூறப்படுகிறது.