குடிபோதை தகராறில் வாலிபரை கொன்ற 5 நண்பர்கள் கைது
குடிபோதை தகராறில் வாலிபரை கொன்ற 5 நண்பர்கள் கைது
குடிபோதை தகராறில் வாலிபரை கொன்ற 5 நண்பர்கள் கைது
ADDED : ஜன 29, 2024 07:11 AM

சுப்பிரமணியபுரா: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை செங்கல்லால் அடித்துக் கொன்ற, நண்பர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் வசித்தவர் தர்ஷன், 25. கடந்த 24ம் தேதி காலையில், நண்பரான ரமேஷ் என்பவர் வீட்டின் அருகில், கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசார் விசாரித்தனர்.
கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, தர்ஷனை ஐந்து பேர் கும்பல் செங்கல்லால் அடித்துக் கொன்றது தெரிந்தது.
இதுதொடர்பாக தர்ஷனின் நண்பர்களான பிரீத்தம், 25, சந்திரசேகர், 26, யஷ்வந்த், 24, பிரசாந்த், 24, லங்கேஷ், 25, ஆகிய ஐந்து பேரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தர்ஷனின் அம்மாவிடம், அவரது பெரியம்மா 3,000 ரூபாய் கடன் வாங்கினார். அந்த தொகையை பெரியம்மாவிடம் இருந்து, 23ம் தேதி இரவு தர்ஷன் திரும்பி வாங்கினார். பணத்தை தாயிடம் கொடுக்கவில்லை.
நண்பர்களுக்கு போன் செய்து, பாருக்கு வரவழைத்துள்ளார். பிரீத்தம், சந்திரசேகர், யஷ்வந்த், பிரசாந்த், லங்கேஷ், நிதின், ரமேஷ் ஆகியோர், பாருக்கு வந்துள்ளனர்.
குடிபோதையில் பாரில் வைத்து பிரீத்தம், நிதின் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்களே சமாதானம் ஆகிக் கொண்டனர். இதன் பின்னர் தர்ஷன் உட்பட எட்டு பேரும், ரமேஷ் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.
அங்கு வைத்து பிரீத்தம், நிதின் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை விலக்கி விட, தர்ஷன் முயன்றார். 'நீ மது வாங்கிக் கொடுத்ததால் தான், எங்களுக்கு சண்டை வந்தது' என்று கூறி தர்ஷனை, செங்கல்லால் தாக்கிக் கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.