டில்லி வகுப்பறை கட்டுமான மோசடி: 300 வங்கி 'பாஸ்புக்'குகள் பறிமுதல்
டில்லி வகுப்பறை கட்டுமான மோசடி: 300 வங்கி 'பாஸ்புக்'குகள் பறிமுதல்
டில்லி வகுப்பறை கட்டுமான மோசடி: 300 வங்கி 'பாஸ்புக்'குகள் பறிமுதல்
ADDED : ஜூன் 21, 2025 01:21 AM

புதுடில்லி: டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முந்தைய அரவிந்த் கெஜ்ரி வால் தலைமையிலான ஆம் ஆத்மி காலத்தில் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிதிச்சுமை
கடந்த 2015 - 23ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 12,748 வகுப்பறைகள் கட்ட 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 2,405 வகுப்பறைகளுக்கான தேவையிருந்த நிலையில், 10,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படுவது, அரசுக்கான நிதிச்சுமை என குற்றச்சாட்டு எழுந்தது.
கூடுதல் வகுப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்டதாக, 2019ல் டில்லி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் பா.ஜ., புகார் அளித்தது.
இந்த திட்டம், ஆம் ஆத்மிக்கு நெருக்கமான 34 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை, கடந்த 18ம் தேதி, டில்லியில் 37 இடங்களில் சோதனை நடத்தியது.
இதில், போலி வங்கி கணக்குகள், போலி ரசீதுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
லஞ்சம்
இது குறித்து, அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை:
டில்லியில் 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, ஒரு தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் இருந்து, ஆம் ஆத்மி ஆட்சியில் இயற்றப்பட்ட அரசு கோப்புகள், சட்டப்பூர்வ பரிவர்த்தனைகள் என்ற போர்வையில் அரசு நிதியை திருப்பிவிட பயன்படுத்தப்படும் போலி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட 322 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொருட்கள் கொள்முதல் செய்தது தொடர்பான போலி ரசீதுகள், போலி நிறுவனங்கள் பெயரில் 'லெட்டர்பேட்'கள், அதிகாரிகள் பெயரிலான அரசு முத்திரை அடங்கிய ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
வகுப்பறை கட்டுமானத்திற்காக, ஒரு சில தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.