நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி 6 பேரை மீட்கும் பணி தீவிரம்
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி 6 பேரை மீட்கும் பணி தீவிரம்
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி 6 பேரை மீட்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 08, 2025 02:17 AM

குவஹாத்தி, அசாமில், நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ள ஆறு பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள டிமா ஹசாவ் மாவட்டத்தின் உம்ராங்சோ என்ற பகுதியில், 300 அடி ஆழமுடைய நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு, ஒன்பது தொழிலாளர்கள் பணியாற்றினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சுரங்கத்தில் இருந்து இதுவரை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கியுள்ள ஆறு பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மீட்பு பணிக்கு உதவ, தண்ணீரில் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடிய பயிற்சி பெற்ற கடற்படை நீச்சல் வீரர்களின் உதவி கோரப்பட்டுள்ளதாக, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குறிப்பிட்டார்.
நிலக்கரி சுரங்கத்தில், 100 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், சிக்கியுள்ள ஆறு தொழிலாளர்களை மீட்க பயிற்சி பெற்ற கடற்படை நீச்சல் வீரர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், விரைவில் மீட்புப் பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், இன்ஜினியர், மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.