வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்

கோல்கட்டா: வங்கதேச போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தவர் பெயர் மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கியது. அரசு பணிகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய இட ஒதுக்கீட்டை எதிர்த்து தான் இந்த வன்முறை அரங்கேறியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரின் பெயர், மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த போராட்டக்காரரின் பெயர், காக்திப் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இந்த தொகுதி, தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ளது. அவரின் பெயர் நியுட்டன் தாஸ். இவர் 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் மையப்புள்ளியாக இருந்தவர்.
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு ஓட இந்த போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் தமக்கு ஓட்டுரிமை உள்ளது குறித்து நியுட்டன் தாஸ் வீடியோ வழியாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 2024ம் ஆண்டு எனது மூதாதையர்களின் சொத்து விவகாரம் தொடர்பாக வங்கதேசம் சென்றேன். எதிர்பாராதவிதமாக மாணவர்கள் போராட்டத்தில் சிக்கிக் கொண்டேன்.
காக்திப் தொகுதியில் 2014ம் ஆண்டு முதல் வாக்காளராக இருக்கிறேன். 2017ம் ஆண்டு எனது வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போய்விட்டது. உள்ளூர் திரிணமுல் கட்சி எம்.எல்.ஏ., உதவியுடன் புதிய வாக்காளர் அட்டையை பெற்றுவிட்டேன். 2016ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலின் போது ஓட்டும் போட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ஜ., குற்றச்சாட்டு
இந்த பிரச்னைக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், ''வங்கதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேரை, மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் சேர்த்துள்ளதற்கு இந்த சம்பவமே சாட்சி, '' என்று கூறியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த நபருக்கு இரு நாடுகளிலும், ஓட்டுரிமை இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி கூறுகையில், ''வங்கதேசத்தை சேர்ந்த பலர், இங்கு வாக்காளர் பட்டியலில் திரிணமுல் கட்சியினரால் சேர்க்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிர்வாகியான அன்சருல்லா பங்ளாவின் பெயர் முர்ஷிதாபாத் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது,'' என்றார்.இந்த குற்றச்சாட்டுகளை திரிணமுல் கட்சியினர் மறுத்துள்ளனர்.