பீன்யா மேம்பாலத்தில் 16 முதல் 19 வரை தடை
பீன்யா மேம்பாலத்தில் 16 முதல் 19 வரை தடை
பீன்யா மேம்பாலத்தில் 16 முதல் 19 வரை தடை
ADDED : ஜன 11, 2024 11:32 PM

பீன்யா: வாகன சோதனை ஓட்டம் நடப்பதால், பீன்யா மேம்பாலத்தில் வரும் 16ம் தேதி முதல், 19ம் தேதி வரை அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பீன்யாவில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்பட்டன. சில கேபிள்கள் சரியாக பொருத்தப்படாததால், மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கான காரணம் குறித்து, இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தனர். அப்போது, கேபிள்கள் துரு பிடித்துள்ளதால், மாற்றும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
கனரக வாகனங்கள், சர்வீஸ் சாலையில் தான் இயக்கப்படுகின்றன. இதனால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையில், பழுதடைந்த அனைத்து கேபிள்களையும், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மாற்றப்பட்டன.
தற்போது, பீன்யா மேம்பாலத்தில் அனைத்து ரக வாகனங்கள் செல்ல உகந்தது என்று உறுதி செய்து கொள்ள, சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
இதற்காக, 16ம் தேதி முதல், 19ம் தேதி வரை அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து, 17 மாவட்டங்களுக்கு இந்த வழியில் தான் வாகனங்கள் செல்லும் என்பதால், வாகன நெரிசல் ஏற்படுவது உறுதி.