Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/1,500 ஆண்டுகள் பழமையான நாடி நரசிம்ம சுவாமி கோவில்

1,500 ஆண்டுகள் பழமையான நாடி நரசிம்ம சுவாமி கோவில்

1,500 ஆண்டுகள் பழமையான நாடி நரசிம்ம சுவாமி கோவில்

1,500 ஆண்டுகள் பழமையான நாடி நரசிம்ம சுவாமி கோவில்

ADDED : ஜன 11, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
ராம்நகரின் சென்னப்பட்டணா தொட்டமல்லுார் கிராமத்தில் உள்ளது நாடி நரசிம்ம சுவாமி கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கன்வா ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் இக்கோவிலில் உள்ள நரசிம்ம சுவாமி சிலை கருங்கல்லால் ஆனது. மனைவி ஸ்ரீலட்சுமி தேவியுடன், நரசிம்ம சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கோவிலுக்கு முன்பு உள்ள இரும்பு கம்பிகளில், தேங்காய்களை துணியால் கட்டியும், எலுமிச்சை பழத்தை வைத்தும் வழிபட்டால், பக்தர்கள் நினைப்பது நடக்கும் என்பது, ஐதீகம். இந்த கோவிலில் கடவுள் விஷ்ணுவின் சிலைகளும், தியானம் செய்யும் நிலையில், அனுமன் சிலையும் உள்ளன.

சக்தி வாய்ந்த கோவில் என்று, கிராம மக்களால் நம்பப்படுகிறது. இங்கு நரசிம்ம சுவாமி கோவிலை கட்டும்படி, கன்வ முனிவரின் கனவில் தோன்றி, நரசிம்ம சுவாமி உத்தரவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இந்த கோவிலுக்காக, மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜா உடையார் 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

கோவில் அருகில் ஓடும் நதியின் பெயர், முற்காலத்தில் நிர்மலா என்று இருந்து உள்ளது. ஆனால் நதிக்கரையில் அமர்ந்து, கன்வா முனிவர் கடுமையான தியானம் செய்ததால், கன்வா நதி என்று பெயர் மாறியது என்றும், வரலாற்று புராணங்கள் சொல்கின்றன.

சாரங்கதாரா என்ற மன்னர், இப்பகுதியை ஆட்சி செய்து உள்ளார். சுவாதி நட்சத்திரம் அன்று இரவில், கோவிலுக்கு செல்ல மன்னருக்கு, கன்வா முனிவர் தடை விதித்தார்.

இதையும் மீறி கோவிலுக்கு சென்றதால், மன்னருக்கு, முனிவர் சாபமிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. பல சிறப்புகளை கொண்ட, நாடி நரசிம்ம சுவாமி கோவில், பெங்களூரில் இருந்து 65 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது.

பெங்களூரு - மைசூரு பத்து வழிச்சாலையில் பயணித்து, சென்னப்பட்டணா டவுனில் இருந்து, 2 கிலோ மீட்டர் துாரத்தில் கோவிலை சென்றடையலாம். பஸ்சில் சென்றால் சென்னப்பட்டணா சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us