நகைக்காக பெண்ணை கொன்ற வாலிபர் 4 மாதத்திற்கு பின் கைது
நகைக்காக பெண்ணை கொன்ற வாலிபர் 4 மாதத்திற்கு பின் கைது
நகைக்காக பெண்ணை கொன்ற வாலிபர் 4 மாதத்திற்கு பின் கைது
ADDED : மார் 12, 2025 05:56 AM

கொத்தனுார்; நகைக்காக பெண்ணை கொன்ற, பக்கத்து வீட்டு வாலிபர், நான்கு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பாகலுாரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. கொத்தனுார் அருகே நாகேனஹள்ளியில் வசித்த மேரி, 50, என்பது தெரிந்தது. அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
மேரி உடல் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து, பக்கத்து வீட்டில் வசித்த லட்சுமணன் என்பவரையும் காணவில்லை. அவர் பயன்படுத்திய மொபைல் போன் இருக்கும் டவரை ஆய்வு செய்தபோது, டி.ஜே.ஹள்ளியில் உள்ள மனைவி வீட்டில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று விசாரித்தபோது, வேலை விஷயமாக லட்சுமணன் வெளியூருக்கு சென்றதாக அவரது மனைவி கூறினார். அவரை போலீசார் தேடினர்; எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தன் தோழி ஒருவருடன், லட்சுமணன் மொபைல் போனில் பேசியது தெரிந்தது. அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் லட்சுமணனை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் மேரியை கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
'எனக்கு நிறைய கடன் இருந்தது. கணவர் இல்லாமல் தனியாக வசித்த மேரியிடம், நகை இருப்பது தெரிந்தது. அவரை கொன்று நகையை கொள்ளை அடிக்க திட்டமிட்டேன். நவம்பர் 26ல் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றேன். அவர் அணிந்திருந்த 50 கிராம் எடையுள்ள செயினை எடுத்துக் கொண்டேன். வேறு எந்த நகையும் வீட்டில் இல்லை. உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று, குப்பை கிடங்கில் வீசினேன்' என போலீசாரிடம் லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.