தங்க நகைகளை திருடிய ஓய்வு ஆசிரியை கைது
தங்க நகைகளை திருடிய ஓய்வு ஆசிரியை கைது
தங்க நகைகளை திருடிய ஓய்வு ஆசிரியை கைது
ADDED : மார் 12, 2025 05:55 AM

பெங்களூரு; பெங்களூரில் நடந்த நகைக் கண்காட்சியில், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய மைசூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் ஜன., 17 முதல் 19ம் தேதி வரை தங்க நகை கண்காட்சி நடைபெற்றது. ஜன., 18ம் தேதி மாலையில், அங்கிருந்த நகைக்கடை ஸ்டாலில், 11.950 கிராம் எடை உள்ள வைரம் பதித்த, 'பிரேஸ்லெட்', 59.100 கிராம் எடை உள்ள தங்க வளையல் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த கடை மேலாளர், சுப்பிரமணிய நகர் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, போலீசர் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர். பெங்களூரில் இம்மாதம் 2ம் தேதி தனியார் ஹோட்டலில், மற்றொரு நகைக்கடை கண்காட்சியில் அந்த பெண்ணுக்கு வலை விரித்தனர்.
போலீசார் கணித்தபடியே, இந்த கண்காட்சிக்கு சந்தேகத்திற்குரிய பெண் வந்திருந்தார். சுப்பிரமணிய நகர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், அப்பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர், மைசூரு மாவட்டத்தின் உதயகிரியை சேர்ந்த ஜஹீரா பாத்திமா, 64, என்றும், ஓய்வு பெற்ற ஆசிரியை என்பதும் தெரிய வந்தது.
இவரிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 78 கிராம் தங்க நகைகள், 12 கிராம் வைரம் பதித்த பிரேஸ்லெட் மீட்கப்பட்டன. தங்க நகைகளை திருடும் இவர், அதை வேறு நகைக்கடையில் விற்று வந்தது தெரியவந்தது.