மகளிர் காங்., தலைவர் பதவிக்கு ஆசைப்படும் வாரிசுகள்
மகளிர் காங்., தலைவர் பதவிக்கு ஆசைப்படும் வாரிசுகள்
மகளிர் காங்., தலைவர் பதவிக்கு ஆசைப்படும் வாரிசுகள்
ADDED : ஜூலை 31, 2024 05:02 AM

கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவிக்கு முன்னாள் அமைச்சர்களின் மகள்கள் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருப்பர் புஷ்பா அமர்நாத். இவர், கடந்த 2018 நவம்பரில் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவரின் பதவி காலம், நான்கு ஆண்டுகள்.
கடந்த 2022ல் இவரின் பதவி காலம் முடிந்தாலும், கர்நாடகாவின் அரசியல் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். தற்போது அமைச்சர் அந்தஸ்து உள்ள மாநில அளவிலான வாக்குறுதி நிறைவேற்றும் கமிட்டியின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், பல சிக்கலில் சிக்கி உள்ளது. இப்படி இருக்கும் போது, மகளிர் காங்கிரஸ் தலைவி பதவிக்கு தங்களை சிபாரிசு செய்ய, பலரும் தங்கள், 'காட் பாதர்'களையும், கட்சி மேலிட தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர்.
கட்சியின் சில மூத்த தலைவர்கள், புஷ்பா அமர்நாத்தின் பதவி காலத்தை மீண்டும் நீட்டிக்க வேண்டாம் என்று மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய தலைவி அல்காலம்பாவையும் சந்தித்து, இம்முறை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதே வேளையில், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவரை சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு உள்ள தகுதிகள் அடிப்படையில் வழங்கக்கூடாது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கட்சியில் ஏற்கனவே பதவியில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கு, மனைவிக்கு வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
பதவியை பிடிக்கும் ரேசில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சவும்யா ரெட்டி, முன்னாள் அமைச்சர் மோட்டம்மாவின் மகளும், எம்.எல்.ஏ.,வுமான நயனா மோட்டம்மா, எம்.எல்.ஏ., காஷப்பனவர் மனைவி வீணா, மாநில காங்கிரஸ் பொது செயலர் கிருபா அமர் ஆல்வா, மாநில பொது செயலர்கள் கவிதா ரெட்டி, கமலாட்சி ராஜண்ணா உட்பட பலர் உள்ளனர்.
வாரிசுகளுக்கு பதவி வழங்க கூடாது என்ற கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவும்யா ரெட்டி, தலைவராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -