ADDED : ஜூலை 31, 2024 04:56 AM
கர்நாடக மாநிலத்தின் உலக பிரசித்தி பெற்ற கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது. மீண்டும் சுரங்கப் பணி மேற்கொள்ள வாய்ப்பே இல்லையென மத்திய அரசு 2001ல் மூடி விட்டது.
தங்கச் சுரங்கம் மூடப்பட்டு, 24 ஆண்டுகள் கடந்து விட்டது. மூடும் போது, அப்போதைய தொழிலாளியின் வயது 45 வயதை கடந்திருந்தது. இவர்களால் மீண்டும், அந்த வேலை செய்ய முடியாது. முதியவராகி இருப்பர்.
தங்கச் சுரங்கத்துக்குள் வெட்டி எடுத்த பாறை கற்களை அரைத்தெடுத்து கூழாக்கி, அலசி, அதில் கிடைத்த தங்கத்தை எடுத்து மீதியுள்ள கழிவு மண்ணை திறந்து வெளியில் கொட்டி வைத்துள்ளனர். இதை தான், 'சயனைட் மண் மலை' என்று அழைக்கின்றனர்.
தொழில்நுட்பம் இல்லாமல் அலசி எடுத்தபோது, கழிவு மண்ணில் தங்கமும் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டன்னில் 0.5 கிராம் தங்கம் இருப்பதாக தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சயனைட் மண்ணில் இருக்கும் தங்கத்தை, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு மாநில அரசின் தடை இல்லா சான்று அவசியம். அவர்களும் 'ஓகே' சொல்லி விட்டனர்.
கோலார் லோக்சபா ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு, 'சயனைட் மண்ணில் தங்கம் சுத்திகரிப்பு செய்யும் வேலை அவ்வளவு எளிதான வேலை இல்லை. தங்கவயலில் கொட்டி வைத்துள்ள சயனைட் மண்ணை எங்கே கொண்டு செல்வது? அதனை சுத்திகரித்து மிச்சமாகும் மண்ணை மீண்டும் எங்கே கொட்டுவது.
'மண்ணை கொண்டு செல்லும் போது ஏற்படும் துாசியை தடுப்பது எப்படி. இதனால் ஏற்படும் நோயை, குணமாக்கும் மருத்துவ வசதி என்ன. ஒரு டன்னில் 0.5 கிராம் தங்கம் எடுக்க 2,500 ரூபாய் செலவாகும். இதனால் எந்த லாபமும் இல்லை. இத்திட்டம் பற்றி தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்கள் ஆய்வு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
சயனைட் மண்ணில் தங்கம் எடுப்பது, பா.ஜ.,வின் திட்டமாக இருந்தாலும், இந்த, 'ரிஸ்க்'கே வேண்டாமென்று காங்கிரஸ் நழுவுகிறது. இதில் உள்ள சாதக பாதகங்கள் அறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று ம.ஜ.த., விருப்பப்படுகிறது.
- நமது நிருபர் -