கவுரவ தொகை வழக்குமா ஆம் ஆத்மி அரசு நிதி அமைச்சர் வீட்டை பெண்கள் முற்றுகை
கவுரவ தொகை வழக்குமா ஆம் ஆத்மி அரசு நிதி அமைச்சர் வீட்டை பெண்கள் முற்றுகை
கவுரவ தொகை வழக்குமா ஆம் ஆத்மி அரசு நிதி அமைச்சர் வீட்டை பெண்கள் முற்றுகை
ADDED : ஜூன் 11, 2024 07:49 PM
புதுடில்லி:இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆம் ஆத்மி அரசு அறிவித்த 1,000 ரூபாய் கவுரவத் தொகையை உடனே வழங்கக்கோரி, மாநில நிதி அமைச்சர் ஆதிஷியின் இல்லம் அருகே பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மாநில ஆம் ஆத்மி அரசு, 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், டில்லியைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு முதல்வர் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுமென அறிவித்தது.
திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, டில்லி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக பல முறை உறுதியளித்தார்.
'லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பிறகு, இத்திட்டம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபருக்குள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்' என, நிதி அமைச்சர் ஆதிஷியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை திடீரென மதுரா சாலையில் உள்ள நிதி அமைச்சர் ஆதிஷி இல்லம் மகிளா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர், திடீர் போராட்டம் நடத்தினர். மகளிர் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்ற சபியா பஹீம் என்ற பெண் கூறுகையில், “ஆம் ஆத்மி அரசு, தனது பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கவுரவ தொகை அறிவித்தது. இது ஏதோ தேர்தல் வாக்குறுதி அல்ல. எனவே, அரசாங்கம் இப்போது அந்தப் பணத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும்,” என, வலியுறுத்தினார்.
அமைதியான முறையில் நடந்ததால், போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் பின்னணியில் பா.ஜ., இருப்பதாக, அமைச்சர் ஆதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படுமென அவர் கூறினார்.