Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடருமா?

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடருமா?

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடருமா?

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடருமா?

ADDED : ஜூன் 11, 2024 10:40 PM


Google News
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., 25 தொகுதிகளிலும், ம.ஜ.த., 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், 17ல் பா.ஜ., 2ல் ம.ஜ.த., வெற்றி பெற்றன. 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசை மிஞ்சி, கூட்டணி கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ம.ஜ.த., 7 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி கண்டது. 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசும் ஒரே தொகுதியில் வென்றது.

தற்போது, பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.ஜ.த.,வின் மாண்டியா எம்.பி., குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். விவசாய துறை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கனரக தொழில் துறை கிடைத்ததும் பெரு மகிழ்ச்சியே என்றே கூறியுள்ளார்.

தே.ஜ., அணி


லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில் தேசிய அளவில் கூட்டணி சுமுகமாக முடிந்தது. விரைவில் பெங்களூரு, துமகூரு, மைசூரு, ஷிவமொகா மாநகராட்சி தேர்தல் உட்பட்ட உள்ளாட்சி தேர்தல்களும் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி வைப்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் யோசிக்க துவங்கி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கை விட, தனிப்பட்ட நபரின் செல்வாக்கு முக்கிய காரணமாக அமையும். ஒரு வேளை கூட்டணி நீடித்தால், அந்தந்த கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதோ என்று பலரும் ஏக்கத்தில் உள்ளனர். இது பற்றி தற்போதைக்கு, கவலைப்பட வேண்டாம், தேர்தல் தேதி அறிவித்த பின், அது பற்றி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தலைவர்கள் கூறியுள்ளனராம்.

உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கில், லோக்சபா தேர்தலில் பணியாற்றிய பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இது பற்றி, தங்களுக்கு நெருக்கமான தலைவர்களிடம் புலம்பி வருகின்றனர்.

ஆளுங்கட்சியான காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தல் நடத்த முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே கட்சி பிரமுகர்களுக்கு, வாரியம், கார்ப்பரேஷன் தலைவர், துணை தலைவர், இயக்குனர் பதவிகள் தரப்பட்டன. தற்போது, லோக்சபா தேர்தலில் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து அளவில் அதிகாரம் கிடைக்கும் பதவிகள் தருவதற்கு முடிவு செய்துள்ளது.

மத்திய பதவிகள்


காங்கிரஸ் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சில மூத்த பிரமுகர்களுக்கு, மத்திய வாரியங்களிலும் பதவிகளை தருவது குறித்து பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசிக்கிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து, மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருப்பதால், ஓரிரு மாதங்களில் வாரியங்களுக்கு நியமனம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மொத்தத்தில் கட்சி தரப்பில் உரிய பதவி தரப்படும் என்று தலைவர்கள் கூறினாலும், கூட்டணி ஆட்சியால், அது சாத்தியமா என்று தொண்டர்கள் தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பி கொள்கின்றனர்.

குறிப்பாக, கோலார், மாண்டியா, பெங்களூரு ரூரல், மைசூரு, துமகூரு, ராம்நகர், சாம்ராஜ்நகர், சிக்கபல்லாப்பூர் உட்பட ம.ஜ.த., செல்வாக்கு இருக்கும் மாவட்டங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் தகுந்த முடிவு எடுக்கவில்லை என்றால், உள்ளாட்சி தேர்தலில், முடிவுகள் தலைகீழ் ஆகும் வாய்ப்பு அதிகம் என பலரும் கருதுகின்றனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us