கல்யாண கர்நாடகாவில் வளர்ச்சி பணிகள்; காங்., தோற்ற தொகுதி மக்கள் அதிருப்தி
கல்யாண கர்நாடகாவில் வளர்ச்சி பணிகள்; காங்., தோற்ற தொகுதி மக்கள் அதிருப்தி
கல்யாண கர்நாடகாவில் வளர்ச்சி பணிகள்; காங்., தோற்ற தொகுதி மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 11, 2024 10:40 PM
கலபுரகி : லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்ற பகுதிகளில் கவனம் செலுத்துவதற்கு மற்ற பகுதியினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
ஆந்திராவை ஒட்டி உள்ள கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பால், பல்லாரி ஆகிய ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பீதரில் மத்திய இணை அமைச்சர் பகவந்த் கூபா, பல்லாரியில் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, கலபுரகியில் முன்னாள் எம்.பி., உமேஷ் ஜாதவ், கொப்பாலில் பிரபல மருத்துவர் பசவராஜ் கியாவடார், ராய்ச்சூரில் முன்னாள் எம்.பி., ராஜா அமரேஸ்வர் நாயக் ஆகியோரை, காங்கிரஸ் தோற்கடித்தது.
மற்ற தொகுதிகளில், முக்கியமான தலைவர்கள் தோல்வி அடைந்தாலும், கல்யாண கர்நாடகா தொகுதிகளின் வெற்றி, காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த பகுதியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் விரைவில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
சித்தராமையா முடிவு
கலபுரகி அவரது சொந்த மாவட்டம் என்பதாலும், தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது உணர்வுப்பூர்வமான பேச்சு, வாக்காளர்களை சிந்திக்க வைத்தது என்றும் ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார். அந்த பகுதிகளில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அதிகபட்ச வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
வெற்றியை கொடுத்த மக்களுக்கு, வளர்ச்சி பணிகள் பரிசாக கிடைக்க உள்ளது. என்னென்ன வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன; எவ்வளவு நிதி தேவை என்பது குறித்து, இந்த வாரத்துக்குள், கல்யாண கர்நாடகா அமைச்சர்கள், காங்., - எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
காலியாக உள்ள அரசு பணி இடங்களை நிரப்புவதற்கும் ஆலோசிக்கிறார். திட்டங்கள் குறித்த அறிக்கையை, தயார் நிலையில் வைக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு தரப்பில் உத்தரவு பறந்துள்ளது. மேலும், 2023 - 24, 2024 - 25 மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வரும்படியும், அதற்கான நிதியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிக்கை தயாரிக்கவும், அந்தந்த துறை முதன்மை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள்
மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அதை நிறைவேற்றவும் வாய்ப்பு உள்ளது. பல்லாரி, கலபுரகி ஆகிய இரண்டு மாநகராட்சிகளிலும் அதிகபட்ச வளர்ச்சி பணிகளை அமல்படுத்துவதற்கு ஆளுங்கட்சி யோசித்து வருகிறது.
இது போன்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற தாவணகெரே, சாம்ராஜ்நகர், ஹாசன், சிக்கோடி ஆகிய நான்கு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவதற்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் முதல்வரிடம் முறையிடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில், வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு மட்டும் வளர்ச்சி பணிகள் செய்தால் எப்படி. தோல்வி அடைந்த தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் இங்கும், கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து ஆகிய உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளன.
இப்போது வளர்ச்சி பணிகளை செய்யாமல், இருந்தால், தேர்தலில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர்கள், தங்கள் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் இதுவரை பெறாத பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்யும்படி தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே வளர்ச்சி பணியிலும் பாரபட்சம் பார்ப்பதாக ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.